சைக்கிளுக்கு போடா விட்டாலும் தமிழ்க்கட்சி ஒன்றுக்கே வாக்களியுங்கள்!

You are currently viewing சைக்கிளுக்கு போடா விட்டாலும் தமிழ்க்கட்சி ஒன்றுக்கே வாக்களியுங்கள்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்காது போனாலும் மற்றொரு தமிழ் கட்சிக்கே வடகிழக்கு தமிழ் மக்கள் வாக்களிக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி மாவட்ட முக்கியஸ்தர் எஸ்.தவபாலன் தெரிவித்துள்ளதுடன் தேசிய மக்கள் சக்தி என்ற மாயையை வடகிழக்கில் இருந்து விரட்டியடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாநகர சபைக்கான பிரச்சார கூட்டம் வவுனியா பொங்கு தமிழ் தூபியில்  சனிக்கிழமை (19) ஆரம்பமாகியது. அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழர் தாயகம் மிகப்பெரிய நெருக்கடிக்குள் அல்லது மாய வலைக்குள் சிக்கியுள்ள நேரத்தில் இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாயகத்தை ஆக்கிரமித்திருக்கிற ஜே.வி.பி. என்ற இனவாத கட்சி இம்முறையும் எமது வாக்குகளை சூறையாட நினைக்கும் நிலையில் அதற்கு தமிழ் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என்பதை இங்கு கூறிக்கொள்கிறேன்.

ஆட்சிக்கு வந்து ஏழு மாதங்கள் கடக்கின்ற நிலையில் அவர்கள் கூறியது எல்லாம் பொய் என்று வெளிப்பட்டு நிற்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர். எமது நிலத்தில் எமது மொழியை பயன்படுத்த முடியாத அளவிற்கு அரச அதிகாரம் பயன்படுத்தப்பட்டிருப்பதை ஆனையிறவு உப்பு விடயத்தில் அறிந்துகொள்ள முடியும்.

அத்தோடு தையிட்டி சட்டவிரோத விகாரையில் இவர்களது ஆட்சிக்காலத்தில் தான் புதிதாக தியான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த அரசாங்கங்கள் எவற்றை பின்பற்றியதோ அதைவிட மோசமான முறையில் பல பொய்களை சொல்லி ஆட்சியமைத்த இந்த அரசாங்கம் மீளவும் தமிழ் மக்களை ஏமாற்றவே உள்ளூராட்சி தேர்தல் மூலம் வந்து நிற்கிறது.

எனவே தமிழர் கிராமங்களிலும் வேரூன்ற நினைக்கின்ற ஜே.வி.பி.யினுடைய என்.பி.பி. என்ற மாயை இந்த மண்ணில் இருந்து கலைக்க வேண்டியவர்களாக தமிழ் மக்கள் இருக்கின்றனர்.

இன்று தேர்தல் விதிமுறைகளை முற்றாக மீறிய ஒரு கட்சியாக இது இருக்கிறது. மன்னார் மாவட்டத்தில் அண்மையில் ஜனாதிபதி பங்கேற்ற கூட்டம் ஒன்றில், சர்வாதிகாரப் போக்கிலே தனது வார்த்தைகளை பிரயோகித்துக் கொண்டிருக்கின்றார். ஒரு ஜானாதிபதியாக இருந்துகொண்டு இவ்வாறு செயற்படுவதானது உச்சக்கட்ட தேர்தல் விதி மீறலாகவே அமைந்துள்ளது.

எனவே வடகிழக்கு மக்கள் நேர்மையான அரசியலை முன் நகர்த்திச்செல்பவர்கள் என்ற அடிப்படையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை இந்த தேர்தலில் பலப்படுத்த வேண்டும். அதன் மூலமே என்.பி.பி. என்ற மாயையை வடகிழக்கில் இருந்து அகற்ற முடியும்.

உள்ளூராட்சி மன்றங்களில் மாற்றம் ஒன்றை நிகழ்த்துவதற்கு எமது அரசியல் இயக்கம் தயாராக இருக்கிறது. அத்துடன் இந்த நெருக்கடிகளில் இருந்து மக்கள் விடுபட வேண்டுமாக இருந்தால் எமது அரசியல் இயக்கத்திற்கு வாக்குகளை செலுத்தாவிடிலும் நிச்சயமாக ஏதாவது ஒரு தமிழ் கட்சிக்கே உங்கள் வாக்குகளை அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply