சொந்த மக்களையே பலி வாங்கிய இஸ்ரேல் ராணுவம்!!

You are currently viewing சொந்த மக்களையே பலி வாங்கிய இஸ்ரேல் ராணுவம்!!

இஸ்ரேல் எல்லையில் கடந்த அக்டோபர் மாதம் 1,200 பேர்கள் கொல்லப்பட்டதன் பின்னணியில் முழுமையாக ஹமாஸ் படைகள் இல்லை என்ற தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது. கடந்த அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் எல்லையில் ஒரு இசை விழாவின் போது அதிரடியாக தாக்குதலை முன்னெடுத்த ஹமாஸ் படைகள் 1,200 பேர்களை கொன்றதாக தகவல் வெளியானது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் முன்னெடுத்துவரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 41,000 தொட்டுள்ளது.

ஆனால், அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படைகள் வெறும் துப்பாக்கியுடன் தாக்குதல் நடத்த, பலி எண்ணிக்கை 1,000 கடந்ததன் மர்மம் என்ன என்பது தொடர்பில் விசாரணை முன்னெடுத்த சில பத்திரிகையாளர்கள், தற்போது உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

அக்டோபர் 7ம் திகதி நடந்த களேபரத்தில் இஸ்ரேல் ராணுவம் சொந்த மக்களை கொன்று குவித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். ஹமாஸ் படைகளை எதிர்கொண்ட இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டே சொந்த மக்களையும் கொன்றுள்ளது.

இதில், இஸ்ரேல் ராணுவம், ஹெலிகொப்டர் விமானிகள், பொலிசார் என பலருக்கும் பங்குள்ளதாக கூறப்படுகிறது. உயிர் தப்பியுள்ள பலர் சம்பவத்தன்று இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கையை சந்தேகத்துடன் நினைவுகூர்ந்துள்ளனர்.

இஸ்ரேல் ராணுவத்தின் ரகசிய உத்தரவு காரணமாகவே அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 1986ல் எழுதப்பட்ட ரகசிய கோட்பாட்டின்படி எதிரிகளால் இஸ்ரேல் ராணுவத்தினர் கடத்தப்படும் நிலை ஏற்பட்டால், பணயக்கைதிகளுக்கு ஆபத்தாக முடியும் என்றால் கூட இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்தலாம் என கூறப்படுகிறது.

இதையே அக்டோபர் 7ம் திகதியும் இஸ்ரேல் ராணுவம் முன்னெடுத்துள்ளது. ஹமாஸ் படைகளை பொறுத்தமட்டில் இஸ்ரேல் ராணுவத்தினரை கடத்துவதும் பதிலுக்கு பாலஸ்தீன மக்களை விடுவிக்க கோருவதும் வாடிக்கையாக செய்து வந்தனர்.

கடந்த 2011ல் ஒரே ஒரு இஸ்ரேல் ராணுவ வீரருக்காக ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீன கைதிகளை விடுவித்துக்கொண்டது. இதில் தற்போதைய ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரும் விடுதலையானார்.

அக்டோபர் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவம் ரகசிய கோட்பாட்டினை பின்பற்றியதாகவே தகவல் கசிந்துள்ளது. சம்பவத்தன்று காஸாவுக்கு திரும்பிய வாகனங்கள் மீது இஸ்ரேல் ஹெலிகொப்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த வாகனங்களில் இஸ்ரேல் பணயக்கைதிகள் இருப்பதை தெரிந்தே தாக்குதலை நடத்தியுள்ளனர்.

காஸா மற்றும் இஸ்ரேல் எல்லையை கடக்க முயன்ற மக்கள் மீது அக்டோபர் 7ம் திகதி கடுமையான தாக்குதலை முன்னெடுத்ததாக இஸ்ரேல் விமானப்படை விமானிகள் தெரிவித்துள்ளனர்.

போரில் பயன்படுத்தப்படும் மொத்தம் 28 ஹெலிகொப்டர்கள் குறித்த நாள் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளை மொத்தமாக அழிக்கும் திறன் கொண்ட தாக்குதல் அது என்றும், ஆனால் அந்த எண்ணிக்கையில் ஹமாஸ் படைகள் எல்லை கடக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே ராணுவ டாங்கிகளும் களமிறக்கப்பட, வாகனங்களை குறி வைத்து தாக்கியுள்ளனர். காஸா பகுதிக்கு தப்ப முயன்ற மொத்தம் 70 வாகனங்கள் முழுமையாக தாக்கி அழிக்கப்பட்டதாகவும், அதில் பயணித்தவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாகவும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

மேலும், இஸ்ரேல் குடியிருப்புகள் மீதும் ராணுவ டாங்கிகள் தாக்குதலை முன்னெடுத்துள்ளன. அக்டோபர் தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் முன்னெடுத்துள்ள விசாரணையில், தவறிழைக்கவில்லை என்றே அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் உயிர் தப்பிய இஸ்ரேலிய மக்கள் பலர் ராணுவத்தின் அறிக்கையை ஏற்க மறுத்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply