“போர் வெற்றிவிழாக் கொண்டாட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் பௌத்த இனவாதிகளை திருப்திப்படுத்தும் இனவாதத்தைக் கக்கியுள்ளார். ஒன்றுக்கும் பயப்படமாட்டோம், ஐ.நாவிலிருந்தும் வெளியேறுவோம் என்ற பாணியில் சர்வதேசத்தைப் பார்த்து கூறியிருக்கிறார். உங்களால் முடிந்தால், நெஞ்சுரம் இருந்தால், முதுகெலும்பு இருந்தால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து, ஐ.நாவிலிருந்து வெளியேறுங்கள் பார்க்கலாம்” என அரசுக்குச் சவால் விடுத்துள்ளார் தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி கோட்டாபய நேற்று முன்தினம் பௌத்த சங்கப் pரதிநிதிகளுடனான மாதாந்தச் சந்திப்பில் ஈடுபட்டார். ஒரு நாட்டின் ஜனாதிபதி, பௌத்த பீடங்களுடனோ, மதத் தலைவர்களுடனோ மத வளர்ச்சி பற்றிக் கலந்துரையாடுவதை நாம் தவறெனக் கூற முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக, பௌத்தத்துக்கு முன்னுரிமை என்ற சாட்டை வைத்திருக்கிறார்கள்.”