சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிசுவில், நேற்று காரில் நிரப்பப்பட்ட வெடிகுண்டுகளால் தாக்குதல் நடத்தப்பட்டது.
மக்கள் நடமாட்டம் அதிகமான வரித்துறை அலுவலகம் மற்றும் பாதுகாப்பு சோதனைச்சாவடி உள்ள இடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வரி செலுத்துவதற்காக ஏராளமானோர் வரிசையில் நின்றபோது, பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் வெடித்து சிதறியது.
இந்த கோர தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை தற்போது 90 ஆக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற மிக மோசமான தாக்குதல் இது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1991ல் இருந்து சோமாலியாவில் அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பு, தொடர்ந்து வன்முறைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் அப்பாவி மக்கள் பலர் பலியாகி உள்ளனர். அண்டை நாடான கென்யாவிலும் அல்-ஷபாப் தாக்குதல்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.