ஜநாவுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அவசரகடிதம்!

You are currently viewing ஜநாவுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அவசரகடிதம்!
ஜநாவுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அவசரகடிதம்! 1

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கூட்டாக அவசர கடிதம் அனுப்பிவைப்பு.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆரம்ப (பூச்சிய) வரைபின் அமுலாக்கம் தொடர்பான (operative paragraph) 6ஆம் பந்தியில் பொறுப்புக்கூறல் என்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அவைக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் பொறுப்புக்கூறலை கையாள்வது தொடர்பில் பாதிக்கப்பட்ட தமிழ்த் தரப்பினால் கடந்த 2021 சனவரி 15ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திலும், மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரினால் 2021 சனவரியில் வெளியிடப்பட்ட அறிக்கையிலும், ஐக்கிய நாடுகள் அவையின் முன்னைநாள் ஆணையாளர்கள் மற்றும் சுயாதீன நிபுணர்களாலும் கூட்டாக வெளியிடப்பட்ட கடிதத்திலும் பொறுப்புக்கூறலை கையாள்வதற்கான அணுகுமுறைகள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களை முற்றாகப் புறக்கணித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆரம்ப (பூச்சிய) அறிக்கை வெளிவந்துள்ளமையானது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக் குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறும் வகையில் இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு பாரப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மீளவும் வலியுறுத்துகின்றோம்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆரம்ப (பூச்சிய) வரைபின் 7ஆம் பந்தியில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள 13ஆம் திருத்தம் எந்தவொரு அடிப்படையிலும் தமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியாகவேனும் கொள்ளப்பட முடியாது.

மாறாக சிறீலங்காவின் அரசியலமைப்பானது தமிழ்த் தேசம், சிங்கள தேசம் ஆகிய இரண்டு தேசங்களையும் அங்கீகரிப்பதுடன், பல்தேசங்களை கொண்ட ஒரு சமஸ்டிக் கட்டமைப்பாக மாற்றப்படல் வேண்டும் என்பது தமிழர்களது நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வந்துள்ளது.

எனினும் மாறி மாறி ஆட்சிப்பீடமேறிய சிறீலங்கா அரசாங்கங்கள் யுத்தத்தின் முன்னரும் பின்னரும் அந்தக் கோரிக்கைகளை தொடர்ச்சியாக நிராகரித்தே வந்துள்ளன.

ஆகையால் தமிழர்கள் ஒரு தேசம் என்ற அடிப்படையில் அவர்களது சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு தமிழர்கள் தங்களது அரசியல் அந்தஸ்த்தை தீர்மானிக்கக்கூடிய வகையில் தீர்மானங்கள் அமையவேண்டுமெனக் கோருகின்றோம்.

பகிர்ந்துகொள்ள