மக்களின் அரச எதிர்ப்பு போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. ஜனாதிபதி உள்ளிட்ட ஏனைய அரசியல்வாதிகளை பதவியில் இருந்து விலகுமாறு கோரி மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகம், சுதந்திர சதுக்கம் போன்ற பகுதிகளில் பெருந்திரளான மக்கள் ஒன்று திரண்டு நேற்றிரவு தொடக்கம் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்துக்கு முன்பாகவும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அத்துடன் கொழும்பு விகாரமஹாதேவி பூங்கா மற்றும் தாமரைத்தடாகம் பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைவிட கண்டி, மட்டக்குளி, கொட்டாஞ்சேனை போன்ற பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, பிலியந்தலை பகுதியில் அமைந்துள்ள காமினி லொக்குகேயின் வீட்டுக்கு முன் மக்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட நிலையில், அங்குள்ள பெரிய பதாகைக்கும் தீ வைக்கப்பட்டது. இதையடுத்து பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்தனர்.
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் கண்டி இல்லத்துக்கு அருகில் திரண்ட போராட்டக்காரர்கள் மீதும் கண்ணீர்ப்புகை குண்டுகள் பிரயோகிக்கப்பட்டுள்ளன.