ஜப்பானின் ஆளும் லிபரல் டெமோக்ரடிக் கட்சியின் (LDP) புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புமியோ கிஷிடா நாளை திங்கட்கிழமை ஜப்பானிய பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
லிபரல் டெமோக்ரடிக் கட்சி தலைமையிலான ஆளும் கூட்டணி இரு அவைகளிலும் பெரும்பான்மையைக் கொண்டுள்ளதால் 64 வயதான புமியோ கிஷிடா நாளை பாராளுமன்ற அமர்வில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
இதேவேளை, புதிய பிரதமராக பொறுப்பேற்கவுள்ள புமியோ கிஷிடா, ஒக்டோபர் 14 ஆம் திகதி பிரதிநிதிகள் சபையை கலைக்க திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து இவ்வாண்டு நவம்பர் 07 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என தெரியவருகிறது.
ஜப்பானில் நடுத்தர வர்க்கத்தினரின் வருமானத்தை அதிகரிக்க் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், ஏழை – பணக்காரா்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வைக் குறைக்கவும் தனது அரசு நடவடிக்கை எடுக்கும் என புமியோ கிஷிடா உறுதியளித்துள்ளார்.
அத்துடன், கொவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வணிகங்களுக்கும் உதவ 10இலட்சம் கோடி யென் மதிப்புள்ள ஒரு பொருளாதார ஊக்குவிப்பு உதவித் திட்டம் தயாராக உள்ளதாகவும் அவா் அறிவித்துள்ளார்.
இதேவேளை, தனது அமைச்சரவை இறுதிப் பட்டியலை இன்று முடிவுறுத்த புமியோ கிஷிடா திட்டமிட்டுள்ளார். அவரது அமைச்சரவையில் முன்னாள் கல்வி அமைச்சர் ஹிரோகாசு மாட்சுனோ தலைமை அமைச்சரவை செயலாளராக நியமிக்கப்படவுள்ளார்.
முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் சுனிச்சி சுசுகி நிதி அமைச்சராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளது என ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்தன.