இலங்கை அரசாங்கத்திற்கு ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை வழங்குவது தொடர்பில் இணக்கங்கள் மற்றும் தேவைப்பாடுகளை ஆராய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு அடுத்த மாதம் விஜயம் செய்யவுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி வருகை தரும் அக்குழுவானது மே 7 வரை தங்கியிருக்கவுள்ளதோடு அக்காலத்தில் வெளியுறவு, சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் அமைச்சர்களையும், உயர் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் தற்போது இலங்கைக்கு வழங்கியுள்ள ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைகள் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு முதல் மாற்றங்களுக்கு உள்ளாகவுள்ளன, அவ்விதமான நிலையில் ஆய்வுகளின் அடிப்படையில் அதியுச்சமாக ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீளப்பெறுவதற்கான இயலுமையும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதுமட்டுமன்றி, ஜி.எஸ்.பிளஸ். வரிச்சலுகைகளை வழங்குவதற்காக புதிய வழிகாட்டுதல்களை தயாரித்துள்ள ஐரோப்பிய ஒன்றியமானது பயனாளி நாடுகள் மனித உரிமைகள், தொழிலாளர் விடயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி தொடர்பான விடயங்கள் சர்வதேச தரங்களுடன் காணப்படுகின்றமையை உறுதி செய்வற்காக கடுமையான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதில் இறுக்கமான நிலைப்பாடுகளை கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, இலங்கைக் கொள்கைக் கற்கைகள் நிறுவகமானது மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை இலங்கை பெற்றுக்கொள்வது நிறுத்தப்பட்டால் 1.23 பில்லியன் டொலர்கள் வருமானத்தினை இழக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த வரிச்சலுகை இழக்கப்பட்டால் இலங்கை அதிகமான வரி அதிகரிப்பைச் செய்ய நேரிடும் என்பதோடு அவ்விதமான நிலைமை ஏற்படுகின்றபோது ஐரோப்பிய ஒன்றியத்திற்கான மொத்த ஏற்றுமதியில் 36.7சதவீதம் இழக்க நேரிடும் என்றும் இலங்கைக் கொள்கைக் கற்கைகள் நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, உயர் தொழில்நுட்ப பொருட்கள் போன்ற துறைகளில் ஏற்படும் தாக்கங்களால் ஏற்றுமதியில் 10சதவீதமான சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதோடு, ஆடைத் துறையின் கட்டணங்களும் கிட்டத்தட்ட 10சதவீதம் உயர்வடையக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஏற்றுமதியில் ஏற்படும் இச்சரிவுகள் உள்நாட்டில் குறிப்பிடத்தக்க வேலை இழப்புகளுக்கு வழிவகுக்கவுள்ளதாகவும் விசேடமாக உற்பத்தித் துறையில், 73,574 தொழிலாளர்கள் பாதிப்படைவதற்கு வழிசமைக்கும் என்றும் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குறைந்த திறன் கொண்ட ஊழியர்கள் இந்த நெருக்கடிகளுக்க முகங்கொடுக்க நேரிடும் என்றும் இலங்கைக் கொள்கைக் கற்கைகள் நிறுவகம் தனது ஆய்வை மையப்படுத்தி தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.