ஜி.எஸ்.பி வரிச்சலுகையை ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும்!

You are currently viewing ஜி.எஸ்.பி வரிச்சலுகையை ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும்!

இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் நாம் வெளிப்படுத்திய கரிசனைகள் சரியானவை என்பதை ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தின் உயரதிகாரிகள் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறானதொரு பின்னணியில் ஏனைய நாடுகளின் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதற்கு ஜி.எஸ்.பி வரிச்சலுகையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியப்பாராளுமன்றத்தின் உபதலைவர் ஹெய்டி ஹொற்றாலா வலியுறுத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி இலங்கை மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான கரிசனைக்குரிய விடயங்களில் பயங்கரவாதத்தடைச்சட்டம் முக்கியமானதாகும் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், எத்தகைய திருத்தங்கள் மேற்கொள்ளப்படப்போகின்றன என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியப்பாராளுமன்ற உபகுழுவின் அமர்வு கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற நிலையில், அதில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஆராயப்பட்டது. அந்த அமர்வில் கலந்துகொண்டு இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்துத் தெளிவுபடுத்திய ஐரோப்பிய ஒன்றியப்பாராளுமன்றத்தின் உபதவைர் ஹெய்டி ஹொற்றாலா மேலும் கூறியதாவது:

இலங்கையின் கரிசனைக்குரிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பிலும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கலை மீளாய்விற்கு உட்படுத்துவது குறித்தும் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐரோப்பிய ஒன்றியப்பாராளுமன்றத்தின் தலைவருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் எழுத்துமூலம் தெரியப்படுத்தியிருந்தோம்.

அதற்கான பதில் இம்மாதம் 6 ஆம் திகதி எமக்குக் கிடைத்தது. அதில் இலங்கை தொடர்பில் நாம் வெளிப்படுத்திய கரிசனைகள் சரியானவையே என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதுமாத்திரமன்றி இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்தக்கூடியவாறான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான கரிசனைக்குரிய விடயங்களில் பயங்கரவாதத்தடைச்சட்டம் முக்கியமானதாகும். சர்வதேச சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு அமைவாக அச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று பல்வேறு தரப்பினராலும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுவருகின்றது.

அந்தவகையில் அச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவையில் அனுமதி பெறப்பட்டிருப்பதாக புதன்கிழமை ஐரோப்பிய ஒன்றியப்பாராளுமன்ற உபகுழுவிற்கு இலங்கை அறிவித்திருக்கின்றது. அதனூடாக எதிர்வருங்காலங்களில் எத்தகைய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

அதேவேளை ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை என்பது இவ்வாறான முக்கிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டுவரும் சலுகையாகும்.

எனவே இலங்கைக்கு இச்சலுகையைத் தொடர்ந்து வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்யப்படவேண்டும் என்று ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியப்பாராளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்காண்மை நாடுகளின் சிவில் சமூக செயற்பாடுகளுக்கான இடைவெளியையும் மனித உரிமைகள் நிலைவரத்தையும் ஊக்குவிப்பதற்கு ஜி.எஸ்.பி வரிச்சலுகையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தமுடியும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

மேலும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கடந்த 2020 ஆம் ஏப்ரல் மாதத்திலிருந்து பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்.

இன, மத சமூகங்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்கள் சோடிக்கப்பட்டுள்ளன. அவருக்கெதிரான சாட்சி விசாரணைகளைத் தொடர்ந்து அவருக்கு பிணை வழங்கப்படவேண்டும் என்று அவர் இதன்போது வலியுறுத்தினார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply