ஜெனிவாவில் காத்திரமான புதிய பிரேரணையைக் கொண்டு வர வேண்டும்!

You are currently viewing ஜெனிவாவில் காத்திரமான புதிய பிரேரணையைக் கொண்டு வர வேண்டும்!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர் மாத கூட்டத்தொடரில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள 51/1 தீர்மானத்தைக் காலநீடிப்புச் செய்யக்கூடாது எனவும், மாறாக இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதற்கு வழிவகுக்கக்கூடிய காத்திரமானதொரு புதிய பிரேரணையைக் கொண்டுவரவேண்டும் எனவும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ளது. இக்கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் காத்திரமானதொரு புதிய பிரேரணையைக் கொண்டு வருவதற்குப் பதிலாக, கடந்த 2022ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை மேலும் ஒரு வருட காலத்துக்கு நீட்டிப்பதற்கான சாத்தியப்பாடு குறித்து ஆராயப்பட்டு வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

இருப்பினும் யுத்தத்தின்போது இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மை வெளிப்படுத்தப்படவேண்டும் எனவும், அதனுடன் தொடர்புடைய குற்றவாளிகள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் எனவும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் 2700 நாட்களுக்கு மேலாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உள்ளிட்ட உள்நாட்டுப் பொறிமுறைகளில் முற்றாக நம்பிக்கை இழந்திருக்கும் தாம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச கட்டமைப்புக்களின் மீது மாத்திரமே நம்பிக்கை கொண்டிருப்பதாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அவ்வாறிருக்கையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதக் கூட்டத்தொடரின்போது இலங்கையில் பொறுப்புக்கூறலை வலியுறுத்திக் காத்திரமானதொரு புதிய பிரேரணை கொண்டுவரப்பட வேண்டுமே தவிர, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பிரேரணையை கால நீட்டிப்புச் செய்வதற்கு முற்படக்கூடாது எனவும் அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கடந்த மாதம் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியைப் பார்வையிடுவதற்கு வருகைதந்த ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க்-அன்ட்ரூ பிரென்சிடம் தாம் எடுத்துரைத்ததாகவும், எனவே இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை மேற்கொள்வதற்கு வழிவகுக்கக் கூடியவாறானதொரு புதிய பிரேரணை ஒன்றே எதிர்வரும் செப்டெம்பர் மாதக் கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments