ஜெயந்தி கீதபொன்கலன் அவர்களிற்கு
“நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு
தமிழீழத்தின் மீதும் தாய்மொழி மீதும் பற்றுக்கொண்டு, தனது இறுதிமூச்சுவரை தமிழீழ விடுதலைக்காகப் பணியாற்றிவந்த ஜெயந்தி கீதபொன்கலன் அவர்கள், கடந்த 02.05.2024 அன்று உடல்நலக்குறைவால் சாவடைந்தார் என்ற செய்தியானது எமக்கு ஆழ்ந்த துயரினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் மீதும் தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள் மீதும் பற்றுறுதி கொண்ட ஜெயந்தி கீதபொன்கலன் அவர்கள், தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்த சூழ்நிலையிலும் 1991ஆம் ஆண்டிலிருந்து யேர்மனி தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் துணை அமைப்புக்களில் ஒன்றான தமிழ்; கல்விக்கழகத்தோடு தன்னை இணைத்துச் செயற்பட்டவராவார்.
கல்விக்குழுச் செயற்பாட்டாளராகவும் முதன்மை ஆசிரியராகவும் அனைத்துலக நூலாக்கற்குழுவின் செயற்பாட்டாளராகவும் சிறப்பாகச் செயலாற்றிவந்த தமிழ்ச்சான்றோன் இவராவார். அத்தோடு, 2005ஆம் ஆண்டிலிருந்து யேர்மனி தமிழ்ப்பெண்கள் அமைப்பின் செயற்பாட்டாளராகவும் இறுதிவரை செயற்பட்டிருந்தார். எமது எதிர்கால இளந்தலைமுறையினரைத் தமிழீழத் தேசப்பற்றோடும் மொழிப்பற்றோடும் வளர்த்தெடுக்க அயராது செயற்பட்டவராவார். இவரது அன்பான அணுகுமுறையும் கனிவான பேச்சும் சிறந்த செயற்திறனும் பெண்கள் அமைப்பின் முதன்மைச் செயற்பாட்டாளர்களில் ஒருவராக இவரை உயர்த்தியிருந்தது. அத்துடன், யேர்மனியில் நடைபெற்ற எமது தேசிய நிகழ்வுகளிலும் தனது முழுமையான பங்களிப்பினை வழங்கிய இவரது செயற்பாடுகள் அளப்பரியவை.
பெண்ணிய விடுதலையினை வெறும் பேச்சாக மட்டும் கொள்ளாது செயல் வீச்சாகக் கொண்ட இவரது இழப்பானது ஈடுசெய்ய முடியாததாகும். இவரது இழப்பில் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்வதுடன், ஜெயந்தி கீதபொன்கலன் அவர்களது அர்ப்பணிப்புமிக்க தேசவிடுதலைப்பணிக்காகவும் தமிழ்ப்பற்றிற்காகவும் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகிறோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.