புதிய தலைநகருடன் பாலஸ்தீன அரசு உருவாகும் என்றும், ஜெருசலேம் இஸ்ரேல் தலைநகராக தொடரும் என்றும் மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்.
பாலஸ்தீனத்தை யூத அரசு மற்றும் அரபு அரசு என இரண்டாக பிரிக்க கடந்த 1947-ம் ஆண்டு ஐ.நா பரிந்துரைத்தது. அதன் பிறகு 1948-ம் ஆண்டு இஸ்ரேல் எனும் தனிநாடு உருவானது. அப்போதே பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் வெடித்தது. 1967-ம் ஆண்டு மத்திய கிழக்கு போரின் போது பாலஸ்தீனத்தின் கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குகரை பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக பாலஸ்தீன எழுச்சி உருவானது.
பல ஆண்டுகளுக்கு பிறகு 2014-ல் இருநாடுகளுக்கும் இடையே நடந்த அமைதி பேச்சுவார்த்தை கசப்புடன் முறிந்தது. இந்த சூழலில் கடந்த 2017-ம் ஆண்டு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா அங்கீகரித்தது. இதனால் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையிலான மோதல் மேலும் வலுத்தது.
இந்த நிலையில் இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையிலான பிரச்சினைக்கு தீர்வுகாணும் விதமாக மத்திய கிழக்கு அமைதி திட்டம் என்ற ஒரு திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டார். கிழக்கு ஜெருசலேமில் புதிய தலைநகருடன் கூடிய பாலஸ்தீன அரசு உருவாகும். ஆனால், ஜெருசலேம் பிரிக்கப்படாத தலைநகரமாக இஸ்ரேலுக்கு தொடர்ந்து இருக்கும் என்று அமெரிக்க டிரம்ப் தெரிவித்தார். இதன் மூலம் ஜெருசலேம் இஸ்ரேலுக்கே சொந்தம் என அமெரிக்கா கூறுகிறது.
பாலஸ்தீன சுதந்திர அரசை முன்மொழிந்துள்ள டிரம்ப், மேற்கு கரை குடியேற்றங்கள் மீதான இஸ்ரேலின் இறையாண்மையையும் அங்கீகரித்துள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ அருகில் இருக்க இந்த அமைதி திட்டத்தை அறிவித்த டிரம்ப், “இதுதான் பாலத்தீனத்திற்கான கடைசி வாய்ப்பு” என்றும் கூறினார்.
ஆனால் அமெரிக்காவின் அமைதி திட்டம் இஸ்ரேலுக்கு சாதகமானது என்றும், அது ஒரு சதித்திட்டம் என்றும் கூறி பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் நிராகரித்துள்ளார். மேலும் அமெரிக்காவின் அமைதி திட்டத்துக்கு எதிராக பாலஸ்தீனத்தில் போராட்டம் வெடித்துள்ளது.