மே 18 , தமிழின அழிப்பு நினைவு நாள் யேர்மன் ஜெர்மனி தலைநகர் பெர்லினின் Brandenburger Tor வரலாற்றுச் சதுக்கத்தில் மிக உணர்வுபூர்வமாக நடைபெற்றது. தேசியக் கொடி ஏற்றலுடன் , எமது மண்ணுக்காக தம்மை ஈகம் செய்த மாவீரர்களையும் , சிங்கள பேரினவாத அரசினால் கொல்லப்பட்ட மக்களையும் மனதில் நிறுத்தி முள்ளிவாய்க்கால் வலியை மனதில் சுமந்து சுடர் ஏற்றி மலர் தூவி வணங்கப்பட்டது.

தமிழினத்தின் உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலம் ஓர் ஆறாத வடு எமது தேசத்தின் விடியலுக்காய், மறுக்கப்பட்ட எம் மக்களின் நீதிக்காக புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் சர்வதேச அரசியல் நகர்வுகளூடாக போராட வேண்டியது எமது தேசியக் கடமை. தமிழின அழிப்புக்கு பன்னாட்டு சுயாதீன விசாரணையை வலியுறுத்தி மனு தயாரிக்கப்பட்டு யேர்மன் ரீதியாக 37 அமைப்புகளின் ஆதரவுடன் யேர்மன் வெளிவிவகார அமைச்சு அனுப்பி வைக்கப்பட்டது.

புலம்பெயர்ந்து பிறந்துவளர்ந்தாலும் எமது தாய்மண்ணையும், இன அடையாளத்தையும் எம் சிறார்களுக்கு ஊட்டி வளர்க்கும் முகமாக கடந்த 8 வருடங்களாக தமிழ் பெண்கள் அமைப்பு யேர்மனி , பேர்லின் கிளையினரால் “முள்ளிவாய்க்கால் முற்றம்” எனும் சிறுவர்களின் ஆக்கம் கையெழுத்துப் பிரதியாக வெளியிடப்படுகின்றது.முள்ளிவாய்க்கால் பெரும்வலியை எடுத்துரைக்கும் கவிதைகள்,தமிழீழ வரைபடத்தை, விடுதலையின் அவசியத்தை உணர்த்தும் சித்திரங்களை உள்கொண்டதாக இவ்வருட “முள்ளிவாய்க்கால் முற்றம்” இதழ் 8 நேற்றைய தினம் வெளியிடப்பட்டது.

சர்வதேசமயப்படுத்தபட்ட தமிழீழ விடுதலை போராட்டத்தின் ஒன்றுபட்ட தமிழினமாக தொடர்ந்தும் பயணிப்போம் என உறுதி எடுத்துக் கொண்டு , தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் முழக்கத்துடன் தேசமும் தேசியமும் எமது உயிர் நாடி என்ற உறுதியோடு நிகழ்வு நிறைவேறியது.
நிகழ்வின் இறுதியில் “முள்ளிவாய்க்கால் கஞ்சி” அனைவருக்கும் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.












