ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் முன்பு திடீரென தங்களது ஜெர்சியை கழற்றி இரண்டு பெண்கள் அரைநிர்வாணமாக நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜெர்மன் தலைநகர் பெர்லினில் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் உடன் செல்ஃபி புகைப்படம் எடுக்க முற்பட்ட இரண்டு பெண்கள் திடீரென தங்களது மேலாடை ஜெர்சியை கழற்றி அரைநிர்வாணமாக நின்றதோடு மட்டுமில்லாமல் ரஷ்யாவிற்கு எதிரான எரிவாயு தடைகளை கோரும் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அந்த இரண்டு பெண் போராட்டக்காரர்களையும் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸின்(Olaf Scholz) பாதுகாப்பு அதிகாரிகள் வேகமாக அங்கிருந்து வெளியேற்றினர்.
இந்த போராட்டமானது உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும், ரஷ்யாவிடம் இருந்து ஜெர்மனிக்கு இறக்குமதி செய்யப்படும் எரிவாயுகளை தடை செய்ய கோரியும் நடத்தப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
ரஷ்ய எரிவாயுவையே பெரிதும் நம்பியிருக்கும் ஜெர்மனி, இதுவரை ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவின் அளவினை முழுமையாக தடை விதிக்க முடியவில்லை.
இருப்பினும் ரஷ்ய ஆற்றல்களில் இருந்து விலகிச் செல்ல தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்தி வருகிறது.
இதுத் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு( LNG ) உட்பட மாற்று ஆற்றல் மூலங்களைத் தேடுதல் தொடர்பான மக்களின் கேள்விகளுக்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் பல்வேறு முயற்சிகளை ஷால்ஸ் சுட்டுக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.