ஜேர்மனியில் தஞ்சம் கோரிய தமிழர்கள் நாடு கடத்தல்!

You are currently viewing ஜேர்மனியில் தஞ்சம் கோரிய தமிழர்கள் நாடு கடத்தல்!

ஜேர்மனியில் தஞ்சம்கோரித் தங்கியிருந்த தமிழ் மக்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஜேர்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா (North Rhine-Westphalia) பகுதியில் 30இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கடந்த சில நாட்களில் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள், பெரனில் உள்ள நாடுகடத்தல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வரும் மார்ச் 30ஆம் திகதி அவர்கள், டுசெல்டோர்ஃப் (Düsseldorf Airport) விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு கூட்டு விமானத்தில் நாடு கடத்தப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு தமிழ் அமைப்புகள் நாளை ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

சில நாட்களுக்கு முன்னர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தனது அமர்வில் இலங்கை குறித்த தீர்மானத்தை நிறைவேற்றியது.

இது விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னரும் தமிழர்கள் இன்னமும் துன்புறுத்தல் மற்றும் பாகுபாடுகளுக்கு ஆளாகின்றனர் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

இலங்கையில் சர்வதேச சட்டத்தைக் கடுமையாக மீறியதற்கான ஆதாரங்களைச் சேகரித்து பாதுகாப்பதற்கான பொறுப்பு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானம், தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் பிற அமைப்புகளுக்கும் திருப்தியாக இல்லாவிட்டாலும், சிங்கள பெரும்பான்மை உள்ள இலங்கையில் மிகப்பெரிய இனத்தின் சிறுபான்மையினருக்கான நீதிக்கான சாதகமான முதல் படியாகும்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் தெளிவான அறிக்கையின் பின்னரும் இவ்வாறு நாடு கடத்துவதற்கான திட்டத்தை மனிதாபிமான பார்வையில் இருந்து புரிந்துகொள்ள முடியாததாக உள்ளதாக ஜேர்மனியில் இருந்து வெளியாகும் ANF NEWS செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, தஞ்சம் கோருவோர் ஜேர்மனியில் தங்குவதற்கான அனுமதியைப் புதுப்பிக்க வேண்டும் என அந்நாட்டு அதிகாரிகள் அழைப்பு விடுத்ததாகவும் இதப்போது, தஞ்சம் கோரியுள்ள தமிழ் மக்கள் தமது பதிவுகளை மேற்கொள்ளச் சென்றபோது கைதுசெய்யப்பட்டதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஜேர்மனியின் இந்தச் செயற்பாடு, அங்குள்ள தமிழ் சமூகம் மற்றும் பல்வேறு நாடுகளின் புலம்பெயர் தமிழர்களிடையே அதிர்ச்சியையும் சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பகிர்ந்துகொள்ள