ஜேர்மனியில் தொழிற்சங்க பேரணியின் போது விபத்து சம்பவம் ! பலர் கவலைக்கிடம்.

You are currently viewing ஜேர்மனியில் தொழிற்சங்க பேரணியின் போது விபத்து சம்பவம் ! பலர் கவலைக்கிடம்.

ஜேர்மனியின் மியூனிக் நகரில் ஆப்கானிஸ்தான் அகதி ஒருவர் ஓட்டிச் சென்ற கார், கூட்டத்திற்குள் புகுந்த சம்பவத்தில் சுமார் 28 பேர்கள் காயங்களுடன் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது திட்டமிட்ட தாக்குதல் என மாகாண முதல்வர் தெரிவித்துள்ளார். முதற்கட்ட விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்ட நபர் 24 வயது ஆப்கானிஸ்தான் புகலிடக்கோரிக்கையாளர் என்றே தெரிய வந்துள்ளது.

பொலிசார் தெரிவிக்கையில், தொழிற்சங்க பேரணி நடந்துகொண்டிருக்கும் போது வெள்ளை நிற கார் ஒன்று பொலிசாரின் வாகனத்தை நெருங்கியதாகவும், சட்டென்று வேகமெடுத்த அந்த வாகனம் பேரணியில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது மோதியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து பொலிசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ஆனால் தாக்குதலில் ஈடுபட்ட நபர் காயமடைந்தாரா என்பது தொடர்பில் தகவல் இல்லை. இந்த நிலையில் துரிதமாக செயல்பட்ட பொலிசார், அந்த நபரை கைது செய்துள்ளனர்.

இது அநேகமாக ஒரு தாக்குதலாக இருக்கலாம் என்றே பவேரியா மாகாண முதல்வர் மார்கஸ் சோடர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட நபர் போதைப்பொருள் மற்றும் கடைத் திருட்டு குற்றங்களுக்காக பொலிசாருக்குத் தெரிந்திருந்தவர் என்றே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

வெளியான தகவலின் அடிப்படையில், 2016ல் ஜேர்மனியில் நுழைந்த அந்த நபரின் புகலிடக் கோரிக்கை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தது என்றும், ஆனால் அவரை வெளியேற்றாமல் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட நபர் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், அதன் பின்னர் அவர் நாடுகடத்தப்பட வேண்டும் என சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுவரை 28 பேர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதில் சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவதாக கூறப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply