ஜேர்மனியில் இரண்டு உக்ரேனியர்கள் கத்திக் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெற்கு ஜேர்மனிய கிராமமான முர்னாவில்(Murnau) உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் சனிக்கிழமை மாலை இரண்டு ஆண்கள் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தனர்.
ஜேர்மனிய அதிகாரிகளின் தகவல் படி, கொலை செய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 36 வயதுடைய உக்ரேனிய குடிமக்கள் என்பதும், அவர்கள் இருவரும் கார்மிஷ்-பார்ட்டன்கிர்கன்(Garmisch-Partenkirchen) மாவட்டத்தில் வசித்து வந்தனர் என்பதும் தெரியவந்துள்ளது.
தாக்குதல் நடந்த சமயத்தில் இளைஞர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார், மற்றொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த கொலை வழக்கில் 57 வயதான ரஷ்யர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான ரஷ்ய குடிமகனை, குற்றம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள அவரது வீட்டில் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த கத்திக்குத்து பின்னணி இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. மூவரும் முன்னர் பழக்கமானவர்களா என்பதையும் விசாரணை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.
“இந்த சம்பவத்தை சந்தேகத்திற்குரிய இரட்டைக் கொலை வழக்காக குற்றவியல் விசாரணை துறை கருதுகிறது,” என்று காவல் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த கத்திக்குத்து மோதலில் உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் செல்வாக்கு செலுத்தியதா என்பதை ஜேர்மன் அதிகாரிகள் இன்னும் விசாரித்து வருகின்றனர்.