டக்ளஸ் அனுமதி இன்றி மணிவண்ணனால் யாழ் மாநகர சபைக்கு தும்புத்தடியைக்கூட வாங்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் க. சுகாஷ் தெரிவித்தார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறக்கூடாது என மறைமுகமான நிகழ்ச்சி நிரலில் தோழர் மணிவண்ணன் செயற்பட்டார். நாடாளுமன்றில் கஜேந்திரகுமாரின் செயற்பாடுகள் தற்போதய அரசிற்கு வயிற்றில் புளியைக் கரைத்து விட்டது.
கஜேந்திரகுமாரின் செயற்பாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை நிறுத்திவிடும் என்பதால் த.தே.ம.முன்னணியை பலவீனப்படுத்த இந்த பதவி நாடகத்தை சுகந்திர கட்சி. டக்ளஸ் தேவானந்தா ஆகியோரோடு இணைந்து மணிவண்ணன் நிகழ்த்தியுள்ளார்.
நல்லூர் பிரதேச சபையில் தவிசாளர் தெரிவு முடிந்த பின்னர் எமது கட்சியைச் சேர்ந்த பெண் உறுப்பினர்களைப் பார்த்து மணிவண்ணனின் பக்க்கத்தில் நின்ற அவரின் சகாக்கள் மது போதையில் பேசக்கூடாத வார்தைகளில் பேசியுள்ளனர்.
மேர்வின் சில்வா புரிந்த கீழ்த்தரமான அரசியலை எமது தேசத்திலும் புரிய முற்படுகின்றனர். சிலரது கனவு மேயர் கனவு எமது கனவு தேசக் கனவு. மக்கள் இதனை புரிந்து கொள்வார்கள்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய கட்சியுடன் இணைந்து மணிவண்ணன் மேயராகிவிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோருவதை என்னவெண்று சொல்வது? டக்ளஸ் தேவானந்தாவோடு மேற்கொள்ளப்பட்ட டீலிங்கில் இது பற்றி ஏதும் பேசப்பட்டதா?
டக்ளஸ் அனுமதி இன்றி மணிவண்ணனால் யாழ் மாநகர சபைக்கு தும்புத்தடியைக்கூட வாங்க முடியாது. மணிவண்ணன் தற்போது சுமந்திரன் போல் குதர்க்கமாக பேசுகிறார்.
மணிவண்ணன் இம்முறை நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டிருந்தால் அமைச்சர் மணிவண்ணன் ஆகியிருப்பார். அவரைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்வார்கள். அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் எங்களுக்கு 10 – 15 ஆசனங்களை கைப்பற்றுவோம்.
மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நாம் தீர்மானிக்கவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின் அதுபற்றி தீர்மானிப்போம், என்றார்.