டென்மார்க்கின் கொல்பேக் நகரில், புனித எலிசபெத் தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.
நேற்று 15.05.2024 17:30 மணிக்கு டென்மார்க்கில் கொல்பேக் நகரில் உள்ள புனித எலிசபெத் தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் இனவழிப்பில் உயிர்நீத்த மக்களுக்கும் மாவீரர்களுக்குமான சிறப்பு வழிபாடும், திருப்பலி நிகழ்வும் அருட்தந்தை மிக்கேல் பியன்கோவ்ஸ்கி அவர்களால் நடாத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களால் அகவணக்கம் மலர் வணக்கம் மற்றும் ஈகைச்சுடரேற்றல் மிகவும் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது.
முள்ளிவாய்க்கால் வாரத்தையொட்டி டென்மார்க் தலைநகரில் கவனயீர்ப்பு!
டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தினால் (15.05.2024) டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் Kongens Nytorv சதுக்கத்தில் கவனயீர்ப்பு நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. இந் நிகழ்வில் 2009 இல் தமிழினத்திற்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட இன அழிப்பை, இங்கு வாழும் டெனிஸ் மக்களுக்கும் மற்றும் வேற்றின மக்களுக்கும் எடுத்துரைக்கும் வகையில் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது. தாயகத்தில் எம் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியை பறைசாற்றும் விதத்தில் பதாகைகள், விபரணப் படங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தியதுடன், பங்கு கொண்ட மக்களால், இன அழிப்பில் உயிர்நீத்த மக்களுக்கான வணக்க நிகழ்வும் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது.
தொடர்ந்து இக் கவனயீர்ப்புப் நிகழ்வு 16.05 2024 அன்று கோபன்ஹேகன் நகரசபை சதுக்கத்திலும் மற்றும் 17.05.2024 அன்று மீண்டும் Kongens Nytorv சதுக்கத்தில் நடைபெறவுள்ளது, அத்துடன் எதிர்வரும் 18.05.2024 அன்று டென்மார்க் தலைநகரில் நீதிக்கான ஏழுச்சிப் பேரணியும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.