ஆண்டுகள் கடந்து போயினும்.. ஆறாததும் யாராலும் ஆற்றுப்படுத்த முடியாததுமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நேற்று ஞாயிற்றுக்கிழமை 15.05.2022 டென்மார்க்கின் கிறின்சட் நகரில் உள்ள தேவாலயத்தில், 2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான விசேட நினைவேந்தலும் திருப்பலிப் பிரார்த்தனையும் மிகவும் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டது. அருட்தந்தை Steen Frøjk Søvndal அவர்களினால் தோத்திரப் பாடல்கள் பாடப்பட்டு திருப்பலி கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, விசேடமாக தேவலாயத்தில் வைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு அருட்தந்தை அவர்கள் முதன்மைச் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினார்.

தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் நீதிக்கு மாறாக இனப்படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளுக்கு மலர் வணக்கம் மற்றும் சுடர் வணக்கமும் பொதுமக்களால் செலுத்தப்பட்டு, சிறப்புரைகளும் இடம்பெற்றது. நினைவேந்தல் நிகழ்வின் நிறைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சியின் சிறப்பை எடுத்துரைத்து வருகை தந்தவர்களுக்கு கஞ்சி பரிமாறப்பட்டதோடு, நினைவேந்தல் நிகழ்வு நிறைவுபெற்றது.








