பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். அதோடு வெளிநாட்டினர் உள்பட சுமார் 250 பேரை ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதை தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பை அடியோடு ஒழித்து, பணய கைதிகளை மீட்போம் என சூளுரைத்து காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. இந்த போர் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்பை அழிக்கும் வரை போர்நிறுத்தம் ஏற்படாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியாக தெரிவித்துள்ளார்.
அதே சமயம், இந்த போரில் காசா நகரம் முழுவதும் சின்னாபின்னமாகி உள்ளது. அங்கு 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகி உள்ளனர். மேலும் 78 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அதோடு, லட்சக்கணக்கான மக்கள் உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.
இந்த போருக்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் கொண்டு வர வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் இஸ்ரேல் அரசை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இஸ்ரேல் ராணுவம் காசாவில் உள்ள ரபா உள்ளிட்ட நகரங்களில் போரை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.
இதனிடையே பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்புடன் இஸ்ரேல் அரசு ஒப்பந்தம் மேற்கொள்ள முன்வர வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தினார். இந்த நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காசா போரை இஸ்ரேல் அரசு கையாளும் விதத்திற்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும் பணயக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்தை இஸ்ரேல் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.