கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய காலகட்டத்தில் ஒரு குறுகிய நிலப்பரப்பில் மக்கள் முடங்கி இருந்த காலப்பகுதியிலே பல்லாயிரக்கணக்கான மக்கள் சிங்கள பேரினவாத அரசினால் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 13ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்று வருகிறது.
இந்த நிகழ்வில் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் பொதுச்சுடர் ஏற்றியதை தொடர்ந்து, ஏனைய உறவுகளும் தமது உறவுகளுக்கான சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலர் தூவி வணக்கம் செலுத்தினர்.
இதேவேளை, முள்ளிவாய்க்கால் பிரகடனமும் வெளியிடப்பட்டுள்ளதோடு, கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய காலகட்டத்தில் மக்கள் பாரிய உணவு நெருக்கடிக்கு முகம் கொடுத்த வேளையிலே அந்த மக்கள் உணவுத் தேவைக்காக பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்த நிலையில் முள்ளிவாய்க்காலில் அவர்களது பசி போக்கியது முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டு வருகிறது.









