ரஷ்யாவுடனான மோதல்கள் தீவிரமடைந்துவருவதால், மேற்குலக நாடுகள் உக்ரைனுக்கு கணிசமான ஆயுத உதவிகளை வழங்கிவரும் நிலையில், உலகளாவிய ரீதியில் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் கொத்தணிக்குண்டுகள் மற்றும் “பொஸ்பரஸ்” எரிகுண்டுகளையும் தந்துதவுமாறு உக்ரைன் மேற்குலகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும், எனினும், நோர்வே அதற்கு உடன்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி கொத்தணிக்குண்டுகள் மற்றும் “பொஸ்பரஸ்” எரிகுண்டுகளை தடை செய்யும் ஒப்பந்தத்தில் உக்ரைன் இதுவரை கைச்சாத்திடவில்லை என்பதால், உக்ரைன் இந்த ஆயுதங்களை பாவிப்பதில் சிக்கல் இல்லை எனவும், ரஷ்யா இவ்வகை ஆயுதங்களை பயன்படுத்துவதாகவும் உக்ரைனிய பாதுகாப்புத்தரப்பு தெரிவித்திருந்தாலும், இவ்வகை ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்க நோர்வே தயாரில்லை என நோர்வே பிரதமரும், நேட்டோ செயலாளரும் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நோர்வே பிரதமர், முன்னதாக நோர்வேயின் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றிய காலகட்டத்தில் கொத்தணிக்குண்டுகள் மற்றும் “பொஸ்பரஸ்” எரிகுண்டுகளை உலகளாவிய ரீதியில் தடைசெய்வதற்கான திட்டமொன்றை முன்மொழிந்து அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டிருந்திருந்த நிலையில், சுமார் 140 நாடுகள் இவ்வாயுதங்களை தடைசெய்யும் ஒப்பந்தத்தில் 2010 ஆண்டில் கைச்சாத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நோர்வே இவ்வாயுதங்களை உக்ரைனுக்கு வழங்கினால் அது நோர்வேக்கு கொள்கை முரண்பாடாகிவிடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
2009 ஆம் ஆண்டு, மே மாதம், முள்ளிவாய்க்காலில் நடாத்தி முடிக்கப்பட்ட தமிழினவழிப்பின்போது, நோர்வே உட்பட 140 நாடுகள் தடை செய்திருக்கும் கொத்தணிக்குண்டுகள் மற்றும் “பொஸ்பரஸ்” எரிகுண்டுகள் பொதுமக்கள் மீது ஏவப்பட்டதில் பெரும் மனித அழிவுகள் நிகழ்ந்தமை, இறுதிக்கணங்களில் மனிதாபிமானப்பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களால் ஆதாரபூர்வமாக வெளிக்கொணரப்பட்டிருந்தாலும், அதுபற்றிய நேர்மையான விசாரணைகள் எதுவும் மேற்குலக நாடுகளால் முன்னெடுக்கப்படவில்லை. குறிப்பாக இவ்வாயுதங்களை தடை செய்வதற்கு முன்னின்று உழைத்ததாக சொல்லிக்கொள்ளும் நோர்வே கூட இதுவிடயமாக வாயே திறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேற்படி ஆயுதங்கள் தடை செய்யப்பட்டவை என கூறப்பட்டாலும், தொடர்ந்தும் இவ்வாயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.