தண்டனையிலிருந்து பாதுகாப்பு வழங்கும் செயற்பாடா? இராணுவ பதவி உயர்வுகள் குறித்து சூக்கா காட்டம்!

You are currently viewing தண்டனையிலிருந்து பாதுகாப்பு வழங்கும் செயற்பாடா? இராணுவ பதவி உயர்வுகள் குறித்து சூக்கா காட்டம்!

இலங்கையில் போர் முடிவடைந்து 11 ஆண்டு நிறைவில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வேண்டுமென்றே அதிகாரிகளுக்கு மேஜர் ஜெனரல் பதவியுயர்வு வழங்கியுள்ளார். பாதுகாப்பு துறைச் சீர்திருத்தத்திற்கான ஐ.நாவின் தீர்மானம் 30/1 இன் கீழ் இலங்கையின் உறுதிப்பாடுகளுக்கு இணங்க உத்தியோகபூர்வ மான பதவிகள் வழங்கப்படமுன்னர் இந்த அதிகாரிகள் வடிகட்டல் மற்றும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது

இந்த தனிநபர்களின் தெரிவானது அரசியலை அடிப்படையாக கொண்டதொன்று. இது இலங்கையர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் பேச்சளவிலான நல்லிணக்கம் என்பது கூட நிகழ்ச்சி நிரலில் இல்லை என்ற செய்தியை மீண்டும் அனுப்புகின்றது. இது பாதிக்கப்பட்டவர்களை இழிவுபடுத்தும் இன்னுமொரு செயலாகவும், தண்டனையிலிருந்து துணிவாக பாதுகாப்பு வழங்கும் செயலாகவும் உள்ளது.

இலங்கையின் ஒரு இராஜதந்திரியாக இருந்தவேளையில் பொதுக் கட்டளைச் சட்டத்தை மீறியதாக நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காத போதும் பிரித்தானிய நீதிமன்றத்தினால் குற்றங்காணப்பட்ட பியங்கா பெர்ணாண்டோவின் பதவியுயர்வானது மிகவும் முக்கியமானதாகும். 2018 இல் உயர் ஆணையக கட்டிடத்திற்கு வெளியே தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கழுத்தை அறுக்கும் சைகையினைக் காட்டி அச்சுறுத்தல் மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டார். இவர் குற்றச் செயல்கள் புரிந்த போதும் இவர் இலங்கைக்கு திரும்பிச் சென்றதில் இருந்து இவருக்கு மீண்டும் மீண்டும் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டதுடன் ஒரு மாவீரனாகவும் அழைக்கப்பட்டார்.

அதிகரித்த இராணுவ மயமாக்கல் மற்றும் ஜனாதிபதிக்கு நெருக்கமான ஓய்வுபெற்ற மற்றும் சேவையாற்றும் அதிகாரிகளுக்கு சிவில் பதவிகள் வழங்கப்பட்டு வரும் பின்னணியில் இந்த பதவிவுயர்கள் இடம்பெற்றுள்ளன. கோவிட் 19 இனால் பாதுகாப்பு பற்றிய கரிசனைகள் இருந்த போதும் ஆயுதப்படையினரை உள்ளடக்கி இந்த வாரம் கொழும்பில் ஒரு போர் ஞாபகாரதத்த நிகழ்வு ஒன்றினை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இவ்வாறான ஞாபகார்த்த நிகழ்வு வடக்கு-கிழக்கில் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு பாதுகாப்பு படையினரால் வைரஸ் ஒரு சாட்டாகப் பயன்படுத்தப்பட்டது.

பொதுச் சமூக மட்டத்தில் இராணுவச் செல்வாக்கு சாதாரணமாக்கப்படுவதையே நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என சூக்கா தெரிவித்தார். தண்டணையிலிருந்து பாதுகாப்பு மேலும் வலுப்பெறும் வகையில் முறைப்படியற்ற வலையமைப்புக்கள் ஜனாதிபதி ராஜபக்சவின் கீழ் உத்தியோகபூர்மானவையாக மாற்றப்பட்டுவருகின்றன” எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள