தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம் கிராமங்கள் உடனடியாக மீள்குடியேற்றப்படவேண்டும்- ரவிகரன்

You are currently viewing தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம் கிராமங்கள் உடனடியாக மீள்குடியேற்றப்படவேண்டும்- ரவிகரன்

ஆக்கிரமிப்பு முற்றுகைக்கள் இருக்கும் முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம் கிராமமக்களை மீள்குடியேற்றுவதற்கு புதிய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கூட்டுறவு பிரதிஅமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் ஆளுந்தரப்பு பராளுமன்ற உறுப்பினர்கள், உரியஅரச அதிகாரிகள் முன்னிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கரைதுறைப்பற்று பிரதேசத்தில் தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம்ஆகியகிராமங்கள் இதுவரை மீள்குடியமர்த்தப்படவில்லை.

தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது சொந்தஇடங்களில் மீள்குடியேறுவதற்குத் தயாராக இருக்கின்றனர். குறித்த கிராமங்களைச்சேர்ந்த மக்கள் தம்மை மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு என்னிடமும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கடந்த 1984ஆம் ஆண்டு அப்பகுதிகளிலிருந்த மக்கள் இடப்பெயர்வைச் சந்தித்திருந்தனர். இருப்பினும் அவர்களை மீளக்குடியமர்த்துவதற்கான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இந் நிலையில் இவ்வாறாகத் தம்மை தமது சொந்தக் கிராமங்களில் மீள்குடியேறவிடாமல் தடுத்துவைத்துக்கொண்டு, தமது பூர்வீக கிராமங்களில் வேறு குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிடுகின்றதா என்ற அச்சத்துடன் அப்பகுதிகளுக்குரியமக்கள் காணப்படுகின்றனர்.

எனவே புதிய அரசாங்கமானது தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம் கிராமமக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் கூடிகவனஞ்செலுத்தவேண்டும். அவர்களை மீள்குடியேற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் – என்றார்.

மேலும் தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம்பகுதிகளில் தமிழ் மக்கள் 1984ஆம் ஆண்டிற்குமுன்னர் குடியிருந்த பெருமளவான பகுதிகளை தொல்லியல் திணைக்களம், வனவளத்திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என்பன கையகப்படுத்திவைத்துள்ளதுடன், தண்ணிமுறிப்பில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான குருந்தூர்மலையில் அடாத்தாக பௌத்த கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply