தனிச் சிங்கள நாடு என்ற சிந்தனையில் இருந்து பிரதமர் மகிந்த விடுபட வேண்டும்!

You are currently viewing தனிச் சிங்கள நாடு என்ற சிந்தனையில் இருந்து பிரதமர் மகிந்த விடுபட வேண்டும்!

இலங்கை முழுவதும் ஒரு பௌத்த நாடு, அது ஒரு தனிச் சிங்கள நாடு என்ற சிந்தனையில் இருந்து பிரதமர் மகிந்த ராஜபக்‌ச விடுபட வேண்டும் என்று, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்ரன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச அண்மையில் இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு செவ்வி அளித்துள்ளார். அதில், தனிநாட்டு சிந்தனையில் இருந்து தமிழர்கள் விடுபட வேண்டும் என்றும், வடக்கு, கிழக்கு பகுதிகளை தனிநாடாக்க வேண்டும் என்பது நடைமுறைச் சாத்தியமான கோரிக்கை அல்ல என்றும் கூறியிருந்தார்.இதுகுறித்து தமது வாராந்த கேள்வி பதில் அறிக்கையில், கருத்து வெளியிட்டுள்ள, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்ரன்-“பிரதமருக்கு பல விடயங்கள் தெரியவில்லை அல்லது மறந்துவிட்டார் போல் தெரிகிறது. இப்பொழுதும் வடக்கு -கிழக்கு தனிப்பட்ட பிரதேசமே. அங்கு பெரும்பான்மையர் தமிழ் மொழி பேசுவோரே, இவர்கள் வாழையடி வாழையாகத் தொடர்ந்து 3000 வருடங்களுக்கு மேலாக வடக்கு கிழக்குப் பிரதேசத்திலும் அவற்றைச் சார்ந்துமே வாழ்ந்து வருகின்றார்கள்.

வடகிழக்கு மக்களுக்கென்று பிறிதான மொழி, கலை, கலாச்சாரம், பாரம்பரிய கைத்தொழில்கள் உள்ளன. வடக்கு கிழக்கில் சிங்களவர்கள் எந்தக் காலத்திலும் பெருவாரியாக வாழவில்லை. வடக்கு கிழக்கு மாகாணங்களில் தற்போதும் பெரும்பான்மை தமிழ் மக்களே வாழ்ந்து வருகின்றனர்.ஆகவே தற்போது தனி நாடாக இருக்கும் வடக்கு கிழக்கைத் தமது பிரத்தியேகப் பிரதேசம் என்று தமிழ்ப் பேசும் மக்கள் எண்ணுவதில் என்ன தவறு?”என்று கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், “ 1987ல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கூட வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரியத் தாயகப் பிரதேசம் என்று கூறப்பட்டது என்பதை சுட்டிக்காட்டியுள்ள சி.வி.விக்னேஸ்வரன்,

இந்த உண்மையை இலங்கை அரசாங்கம் ஏற்றே கையெழுத்திட்டது என்பதையும் நினைவுபடுத்தியுள்ளார்.18 வருடங்கள் வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டே இருந்து வந்த நிலையில், பின்னர் எவ்வாறு தனிநாட்டுச் சிந்தனையில் இருந்து தமிழ் மக்கள் விடுபட வேண்டும் என்று பிரதமர் கூறலாம்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.வடக்கு கிழக்கு சேர்ந்த ஸ்ரீலங்காவை, சிங்கள பௌத்த நாடாக கருதுவது தான் தவறு என்றும், இலங்கை பூராகவும் ஒரு பௌத்த நாடு, அது ஒரு தனிச் சிங்கள நாடு என்ற சிந்தனையில் இருந்து பிரதமர் மகிந்த ராஜபக்ச விடுபட வேண்டும் என்றும், வடமாகாண முன்னாள் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.3000 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து, அடையாளப்படுத்தப்படக் கூடிய பிரதேசங்களில் தமது மொழி, கலை, கலாச்சாரத்துடன் வாழ்ந்து வந்த மக்கட் கூட்டம் சட்டப்படி கோரும் அவர்கள் உரித்தை வழங்காமல், பிரதமர் வாய்க்கு வந்தபடி பேசுவது அவருக்கு அழகல்ல என்றும் கூறியுள்ள சி.வி. விக்னேஸ்வரன், இந்திய ஊடகங்களுக்கு மிகுந்த கவனத்துடன் அவர் தமது செவ்விகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள