தமிழர்களுக்கு எதிராக இன அழிப்பை கட்டவிழ்த்து விட்டு அதன் பழியை ஜே.ஆர் ஜயவர்தன மக்கள் விடுதலை முன்னணி மீது சுமத்தினார் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
நாரஹேன்பிட்டிய பகுதியில் உள்ள 43 ஆவது படையணியின் காரியாலயத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தினால் பிற்போடப்பட்ட உள்ளுராட்சிமன்றத் தேர்தலை தம்மை தெரிவு செய்த 134 உறுப்பினர்களுக்காகவும், பொதுஜன பெரமுனவிற்காகவும் பிற்போட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதுவரை 21 தடவைகள் முயற்சித்துள்ளார்.
அரச அச்சகத் திணைக்கள் வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதை இடைநிறுத்தியுள்ளதால் தபால் மூல வாக்கெடுப்பு தொடர்பில் தற்போது நிச்சயமற்ற தன்மை காணப்படுகிறது. இதன் பின்னணியில் ஜனாதிபதி உட்பட அரசாங்கம் உள்ளது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
யுத்தகாலத்தில் கூட தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன.நாட்டில் தற்போது இயற்கை பெருந்தொற்று,யுத்தம்,இயற்கை அனர்த்தம் என எந்த தடைகளும் இல்லாத நிலையில் நிறைவேற்று அதிகாரம் முறையற்ற வகையில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போட முயற்சிப்பது எந்தளவிற்கு நியாயமாகும்.
அரசியலமைப்பின் பிரகாரம் உரிய காலத்திற்கு தேர்தல் இடம்பெறாது போது நாட்டில் சிவில் போராட்டம் தோற்றம் பெற்ற பல சம்பவங்கள் தோற்றம் பெற்றன.
1975 ஆம் ஆண்டு இடம்பெற வேண்டிய பொதுத்தேர்தர்தலை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் பிற்போட்டதால் நாட்டில் பாரிய சிவில் போராட்டம் தோற்றம் பெற்றது.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன பொதுத்தேர்தலை பிற்போட்டதால் நாட்டில் பாரிய கலவரங்கள் தோற்றம் பெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் தமிர்களுக்கு எதிரான இன அழிப்பை கட்டவிழ்த்து விட்டு அதன் பழியை மக்கள் விடுதலை முன்னணி மீது சுமத்தியது.
விளைவு 60 ஆயிரம் உயிர்களை பலியெடுத்தது.30 வருடகால யுத்தத்தை தோற்றுவித்தது,ஆகவே நிறைவேற்றுத்துறை அதிகாரம் தேர்தலை பிற்போடும் போது அதன் விளைவு பாரதூரமாகவே காணப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட்டால் நாட்டின் சிவில் போராட்டம் தோற்றம் பெறும்.நாட்டு மக்களை இராணுவத்தை கொண்டு அடக்க முடியாது என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் ஓட்டத்தை கண்டு விளங்கிக்கொள்ள வேண்டும்.
தேர்தலை கோரி அமைதி வழி போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை தோற்றுவித்து,நாட்டின் அமைதியற்ற தன்மையை உருவாக்கி அதனை காரணமாக கொண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் குறிப்பாக ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு பொலிஸார் முழுமையான ஆதரவு வழங்குவார்கள்,ஆகவே நாட்டு மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.