தமிழகத்திலிருந்து கள்ளதோணி மூலம் யாழ்.மாவட்டத்திற்குள் நுழைய முயற்சித்த 4 பேர் கடற்படையினரால் காங்கேசன்துறை கடற்பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களில் ஒருவர் கடுமையான சுகயீனமடைந்துள்ள நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
இது குறித்து கடற்படை பேச்சாளர் மேலும் தொிவித்துள்ளதாவது, காங்கேசன்துறை வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தின் சிறப்பு கடற்படைப் பிரிவு
நேற்று சனிக்கிழமை காலை மேற்கொண்ட சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது தொண்டமனாறிலிருந்து 11 கடல் மைல் தொலைவில் உள்ள பகுதியில்
டிங்கிப் படக்கு ஒன்றில் பயணித்த போதே அவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டனர். மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட நான்கு பேரில்
இருவர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடிபெயர முயன்றது தெரியவந்துள்ளது. சந்தேக நபர்கள் 21 முதல் 52 வயதுக்கு உள்பட்டவர்கள்.
மற்றைய இருவரும் பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் முன்னாள் போராளி என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சுவாச பிரச்சினை மற்றும் நெஞ்சு வலி காரணமாக பொலிஸ் பாதுகாப்புடன் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
இன்று ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவிலிருந்து வந்த இருவரில் ஒருவருக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் இருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
மற்றைய மூன்று பேர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை சுகாதார நடைமுறைகளின் படி பாதுகாப்பான மற்றும் தனிமைப்படுத்தல்
நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனையும் முன்னெடுக்கப்படும் என்றார்.