தமிழக காவல்துறையின் மனதை வென்ற இலங்கை தமிழ்ப்பெண்!

You are currently viewing தமிழக காவல்துறையின் மனதை வென்ற இலங்கை தமிழ்ப்பெண்!

தமிழகத்தில் சாலையில் கிடந்த பணக்கட்டை கண்டெடுத்த இலங்கைத் தமிழ்ப்பெண் அதனை நேர்மையாக காவற்துறையினரிடம் ஒப்படைத்ததற்காக காவல் துறையால் பாராட்டப்பட்டுள்ளார். ஈரோடு சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே சாலையில் சிக்கிய ரூ.40,000 பணத்தை, இலங்கைத் தமிழ்ப் பெண், வியாழக்கிழமை, அருகிலுள்ள காவல் நிலையத்தில் திருப்பி அளித்தார்.

இதுகுறித்து காவற்துறையினர் கூறியதாவது: ஈரோடு பவானிசாகரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள ராஜேஸ்வரி (55) என்பவர் பேருந்தில் சத்தியமங்கலம் சென்றார்.

சத்தியமங்கலம் வந்து பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றபோது சாலையில் ஒரு பார்சல் கிடைத்தது. பார்சலை திறந்து பார்த்தபோது அதில் ரூ.500 ரூபாய் நோட்டுகளில் 40,000 ரூபாய் இருந்தது.

சாலையில் சந்தித்த தொட்டம்பாளையத்தை சேர்ந்த கோகுல் (21) என்பவரின் உதவியுடன் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் பணத்தை கொடுத்துள்ளார். பணத்தை இழந்தவர் காவல் நிலையம் வரலாம் என வாட்ஸ்அப்பில் தகவல் பரவியது.

அதையடுத்து, சத்தியமங்கலத்தைச் சேர்ந்த கடைக்காரர் குணசிங்கம் பொலிஸாரை தொடர்பு கொண்டு, அந்தப் பணம் அதே பகுதியில் மிட்டாய் கடை நடத்தி வரும் தனது நண்பர் ஜோஷ்வா (61) என்பவருக்குச் சொந்தமானது என்று கூறினார்.

கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜோஷ்வா மகளுக்கு குழந்தை பிறந்த நிலையில், மருத்துவச் செலவுக்காக இவரிடம் கடன் வாங்கியுள்ளார்.

விசாரணைக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை ஸ்டேஷனில் பணம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் அதிகாரி கூறினார். இதையடுத்து, ராஜேஸ்வரி மற்றும் கோகுல் இருவரையும் அவர்களின் நேர்மைக்காக காவற்துறையினர் பாராட்டினார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply