தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் மோசசை படுகொலை செய்த சமூகவிரோதக் கும்பலை உடனடியாகக் கைதுசெய்! சீமான் வலியுறுத்தல் 

You are currently viewing தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் மோசசை படுகொலை செய்த சமூகவிரோதக் கும்பலை உடனடியாகக் கைதுசெய்! சீமான் வலியுறுத்தல் 

சென்னை, குன்றத்தூர் அருகே புழக்கத்திலுள்ள போதைப்பொருள் வியாபாரம் குறித்த செய்தி வெளியிட்டதால் தமிழன் தொலைக்காட்சியின் செய்தியாளர் தம்பி மோசஸ் அவர்கள் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

ஈடுசெய்ய இயலாப் பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் தம்பியின் குடும்பத்தினரை நினைத்து கலங்கி நிற்கிறேன். அவர்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன்.

சனநாயகத்தின் நான்காம் தூணாக விளங்கக்கூடிய ஊடகங்களில் பணியாற்றும் செய்தியாளர்களுக்கே பாதுகாப்பற்ற அசாதாரணச் சூழல் நிலவுவது விடுதலைபெற்ற நாட்டில்தான் வாழ்கிறோமா என்கிற அளவுக்கு பெரும் கலக்கத்தை மக்கள் மத்தியில் உண்டாக்கியிருக்கிறது. கருத்துச்சுதந்திரம் குறித்த வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்படும் இக்காலக்கட்டத்தில் ஒரு செய்தியை வெளிக்கொண்டு வந்தமைக்காக படுகொலை நிகழ்த்தப்படுவது வன்மையானக் கண்டனத்திற்குரியது.

மோசசின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறதெனக் காவல்துறையில் அவரது தந்தை முன்பே புகாரளித்தும் தக்க நடவடிக்கை எடுக்காது காவல்துறை அலட்சியம் காட்டியதன் விளைவாகவே வீட்டருகேயே இப்படுகொலை அரங்கேற்றப்பட்டிருக்கிறது. துளியளவேனும் விழிப்புக்கொண்டு காவல்துறை முன்னெச்சரிக்கையோடு, அக்கறையுணர்வோடும் செயல்பட்டிருந்தால் ஒரு உயிர் அநியாயமாகப் பறிபோயிருக்காது.

போதைப்பொருள் வணிகம் நடைபெறுவதை வெளிக்கொணர்ந்தததையும், அதற்காகவே கொலைசெய்யப்பட்டதையும், காவல்துறை இவ்விவகாரத்தில் அலட்சியம் காட்டியதையும் கணக்கிட்டுப் பார்க்கிறபோது காவல்துறைக்குத் தெரிந்து அவர்களது ஒத்துழைப்போடுதான் போதைப்பொருள் சார்ந்த வணிகம் நடக்கிறதோ எனும் ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. கஞ்சா வணிகம் குறித்த செய்தி வெளியிட்டதற்காக ஒரு செய்தியாளரை சமூகவிரோதக் கும்பல் மிகச் சாதாரணமாக வெட்டிப்படுகொலை செய்கிறதென்றால் போதைப்பொருள்களை வணிகம் செய்திடும் இக்கும்பலின் ஆதிக்கம் எந்தளவில் சமூகத்திலிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

ஆகவே,  இவ்விவகாரத்தில் தமிழக அரசு விரைந்து செயல்பட்டு தம்பி மோசசை படுகொலை செய்திட்டவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் எனவும், அவரது குடும்பத்தினருக்கு 10 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்கிட வேண்டுமெனவும், போதைப்பொருள் வணிகம் செய்திடும் சமூக விரோதக்கும்பலைக் களைந்திட தனிப்படை அமைக்க வேண்டும் எனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள