தமிழரசுக்கட்சி கூட்டுப் பேச்சுவார்த்தையை நிராகரிக்கக் காரணம் என்ன?

You are currently viewing தமிழரசுக்கட்சி கூட்டுப் பேச்சுவார்த்தையை நிராகரிக்கக் காரணம் என்ன?

புதிய அரசியலமைப்பு வரைவு குறித்த கூட்டிணைந்த பேச்சுவார்த்தைகளை இலங்கைத் தமிழரசுக்கட்சி நிராகரித்திருப்பதற்குக் காரணம் அக்கட்சியின் பதில் செயலாளராக எம்.ஏ.சுமந்திரன் தெரிவுசெய்யப்பட்டமையா? என சந்தேகம் எழுப்பியிருக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கைத் தமிழரசுக்கட்சி அதன் தீர்மானம் தொடர்பில் மறுபரிசீலனை செய்து, வெகுவிரைவில் பேச்சுவார்த்தையில் இணைந்துகொள்ளவேண்டுமென அழைப்புவிடுத்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்த கலந்துரையாடலுக்கு கடிதம் மூலம் அழைப்புவிடுத்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பதிலளித்துக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சி, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தற்போதைய அரசாங்கம் மெத்தனப்போக்கைக் கடைப்பிடிப்பதாலும், அதற்கான முன்மொழிவு எதனையும் முன்வைக்காத நிலையிலும் தாம் அரசியலமைப்பு வரை பற்றி இப்போது விவாதிப்பது பொருத்தமானதாக இருக்கும் எனக் கருதவில்லை என்றும், உரிய நேரம் வரும்போது இதுபற்றிக் கலந்துரையாடலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழரசுக்கட்சியின் அறிவிப்பு தொடர்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் நோக்கில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு இல்லத்தில் நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் மேலும் கூறியதாவது:

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர், புதிய அரசியலமைப்பு வரைவு குறித்த கூட்டுப்பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கு தமது கட்சிக்கு உத்தியோகபூர்வமாக அழைப்புவிடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதனையடுத்து கடந்த மாதம் 25 ஆம் திகதி நானும், செல்வராஜா கஜேந்திரனும் அவரை நேரடியாக சந்தித்து, உத்தியோகபூர்வ அழைப்புக்கடிதத்தை அவரிடம் கையளித்திருந்தோம். இந்நிலையில் அக்கடிதத்துக்குப் பதிலளித்து சி.வி.கே.சிவஞானத்தினால் வெள்ளிக்கிழமை (21) அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில், புதிய அரசியலமைப்பு வரைவு குறித்து இன்னமும் அரசாங்கம் முன்மொழியாத நிலையில், தாம் இப்போது அதுபற்றிப் பேசுவது பொருத்தமற்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 25 ஆம் திகதி நான் அவரை நேரில் சந்தித்துப் பேசியபோது இவ்விடயத்தில் அவர் காண்பித்த ஆர்வத்துக்கும், இப்போது அவரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயத்துக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. இதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கட்சி ரீதியில் இடம்பெற்ற ஒரேயொரு மாற்றம் கட்சியின் பதில் செயலாளராக எம்.ஏ.சுமந்திரன் தெரிவுசெய்யப்பட்டமை மாத்திரமேயாகும்.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அபிப்பிராயங்கள் மற்றும்  நலன்களுக்கும், சுமந்திரனின் தனிப்பட்ட நலன்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடு உண்டு என்பது சகலரும் நன்கறிந்த விடயமாகும். ஏனெனில் 2015 – 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பு வரைவு செயன்முறையில் சுமந்திரனே முதன்மை வகித்தார்.

இருப்பினும் தமிழரசுக்கட்சியில் மிகமுக்கிய நபராகக் காண்பிக்கப்பட்ட அவரை கடந்த பொதுத்தேர்தலில் தோற்கடித்ததன் மூலம் அவரால் தயாரிக்கப்பட்ட ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பு வரைவையும் தமிழ்மக்கள் நிராகரித்தனர். இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது சி.வி.கே.சிவஞானத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் உள்வாங்கப்பட்டிருக்கும் தீர்மானங்களுக்கு சுமந்திரனின் தெரிவே காரணமாக இருக்கக்கூடும். அதுமாத்திரமன்றி பேச்சுவார்த்தையைத் தாமதப்படுத்துவதன் ஊடாக, அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் விரும்பும் ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பு வரைவை தமிழ்மக்கள் நிராகரிப்பதற்கான கால அவகாசத்தைக் குறைப்பதற்கு முற்படுகிறார்களா என்ற சந்தேகமும் எமக்கு உண்டு.

இவ்வாறானதொரு பின்னணியில் சுமந்திரன் அவரது அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். கடந்த காலத்தில் செய்த ஏக்கிய இராச்சிய எனும் தவறைத் திருத்திக்கொள்ளவேண்டும். அதேபோன்று புதிய அரசியலமைப்பு வரைவு குறித்த கூட்டுப்பேச்சுவார்த்தை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை இலங்கைத் தமிழரசுக்கட்சி மறுபரிசீலனை செய்து, வெகுவிரைவில் அதற்கு உடன்படவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

அதேவேளை இதுபற்றி நாம் ஏற்கனவே ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் செல்வம் அடைக்கலநாதனுடன் பேசியிருந்தோம். அதற்கமைய ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணியினர் மற்றும் சிவில் சமூகத்தினர் உள்ளிட்ட பரந்துபட்ட தரப்பினரின் பங்கேற்புடன் தமிழ்மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பு வரைவை அடிப்படையாகக்கொண்டு தொடர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு உத்தேசித்திருக்கிறோம். இப்பேச்சுவார்த்தைகளில் தமிழரசுக்கட்சி எப்போதும் இணைந்துகொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply