தமிழரசுக்கட்சி தனித்தே போட்டியிடும் கூட்டுக்கான பேச்சுக்கள் இடைநிறுத்தம்!

You are currently viewing தமிழரசுக்கட்சி தனித்தே போட்டியிடும் கூட்டுக்கான பேச்சுக்கள் இடைநிறுத்தம்!

இலங்கைத் தமிழரசுக்கட்சி உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தனித்தே போட்டியிடுகின்றது. அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சியின்பதில் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கூட்டம் சனிக்கிழமை (08) மாலை மட்டக்களப்பில் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பாராளுமன்ற குழு பேச்சாளருமான ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள்,வட்டாரக்கிளை தலைவர்கள்,மாவட்ட கிளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது இலங்கை தமிழரசுக்கட்சியானது இம்முறை உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் வேட்பாளர்கள் தெரிவு தொடர்பிலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இதன்போது கருத்து தெரிவித்த சுமந்திரன்,

உள்ளூராட்சித் மன்ற தேர்தலில் வேட்பாளர்கள் தெரிவு தொடர்பாக இலங்கைத் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பிரதானமாக ஒவ்வொரு பிரதேசமாக அலசி ஆராய்ந்து என்ன முறையிலான அணுகு முறையில் நாங்கள் இந்த தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பலருடைய கருத்துக்களும் கேட்கப்பட்டு சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டிருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்தவரையில் நாங்கள் போட்டியிடுகின்ற சகல உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடலாம் என்று நம்பிக்கையோடு எங்களுடைய உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். வருகின்ற வாரத்திற்குள் நாங்கள் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து விடுவதாக தீர்மானித்திருக்கின்றோம்.

ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடுவது வேண்டாம் என்று கூட்டத்தின் போது அனைவராலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. அந்த முயற்சி முடிவடைந்து விட்டது என்பது தான் என்னுடைய கருத்தாகும். எங்களுடைய கட்சியின் தலைவர் அதற்கான ஒரு முயற்சியை முன்னெடுத்திருந்தார்.

ஆனால் எங்களுடன் பங்காளிகளாக இருந்த கட்சிகள் தாங்கள் வேறு ஒரு கூட்டணியாக இணைந்து இருக்கின்றோம் என்று எங்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள். ஆகையினால் ஒரு அணியாக ஒன்று சேர்ந்து போட்டியிடுவது என்பது இப்போது முடியாத விடயம்.

தமிழரசுக் கட்சி தனி அணியாக போட்டியிடும் தேர்தலுக்குப் பின்னர் நிர்வாகங்களை அமைக்கின்ற விடயத்தில் ஒவ்வொரு கட்சிகளுடன் இணைந்து தான் நிர்வாகத்தை அமைக்க வேண்டியதாக இருக்கும். அதுதான் உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முறைமை ஆகையினால் அதை குறித்து தொடர்ச்சியாக பல கட்சிகளோடும் பேசிக் கொண்டு இருக்கின்றோம்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாங்கள் முற்றும் மாறுபட்ட நிலைமையினையே எதிர்பார்க்கின்றோம். தேசிய மக்கள் சக்திக்கு ஒரு அலையோடு மக்கள் வாக்களித்ததை நாங்கள் கண்டோம். ஆனால் இந்த ஒரு சில மாதங்களுக்குள் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களது அபிலாஷைகள் தொடர்பான விடயங்களில் எந்தவித முன்னேற்றத்தையும் காட்டவில்லை ஒரு சறுக்கல் போக்கையே காட்டிக் கொண்டிருக்கின்றது என்பதை காணமுடிகின்றது.

இதனை மக்களும் நன்றாக அறிந்திருக்கின்றார்கள் அதற்கு மேல் அதிகமாக மத்திய அரசாங்கம் அவர்களிடம் இருந்தாலும் இருக்கட்டும் ஆனால் எங்களுடைய ஊர் ஆட்சி உள்ளூர் ஆட்சி எங்களோடு இருக்க வேண்டும் என்பதை எங்களுடைய மக்கள் முனைப்பாக இருக்கின்றார்கள்.

தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடுகின்றது. நான் ஏற்கனவே கூறியது போன்று ஒரு கட்சி தனியாக நிர்வாகத்தை ஆட்சி அமைப்பது என்பது சாத்தியப்பாடு குறைவு. இது தேர்தல் முறைமைலி இருக்கின்ற விடயம்.

ஆகையினால் தேர்தலில் பிற்பாடு நாங்கள் மற்றைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து தான் பல இடங்களில் நிர்வாகங்களை அமைக்க வேண்டிய தேவை கட்டாயமாக இருக்கின்றது என்றார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply