தமிழரசுக் கட்சி முடிவை அறிவிக்கும் வரை காத்திருக்கத் தீர்மானம்!

You are currently viewing தமிழரசுக் கட்சி முடிவை அறிவிக்கும் வரை காத்திருக்கத் தீர்மானம்!

தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் குறித்த முத்தரப்பு கலந்துரையாடலில் பங்கேற்குமாறு தாம் தமிழரசுக் கட்சிக்கு அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், எதிர்வரும் 8ஆம் திகதி அக்கட்சி இறுதித் தீர்மானத்தை அறிவிக்கும் வரை காத்திருப்பதற்கு உத்தேசித்திருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளின் ஓரங்கமாக, அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் ஆரம்பிக்கப்படும்போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து பொதுவானதொரு தீர்வுத்திட்டத்தை முன்மொழிவது குறித்து கடந்த 25ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடுவது எனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின்போது தமிழர்களுக்கான தீர்வுத்திட்டம் குறித்து ஆராய்வதற்கும், அதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியப்பரப்பில் உள்ள ஏனைய கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்குமென கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமது கட்சியின் உள்ளகத் தீர்மானத்துக்கு அமைய 25ஆம் திகதி நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கும் சந்திப்பில் தம்மால் கலந்துகொள்ளமுடியாது என கடந்த 22ஆம் திகதி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் சிறிதரன் அறிவித்தார். அதனையடுத்து ஏற்கனவே ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் கோரப்பட்டிருந்ததற்கு அமைய 25ஆம் திகதி நடாத்த உத்தேசிக்கப்பட்டிருந்த சந்திப்பு 27ஆம் திகதி நடாத்தப்படும் எனவும், அச்சந்திப்பில் தமது கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கலந்துகொள்ளும் எனவும் கஜேந்திரகுமார் தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த சனிக்கிழமை (25) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தை சந்தித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் தமிழ்த்தேசிய கட்சிகள் ஒன்றுகூடி ஆராயவுள்ள நிலையில், அதில் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளையும் கலந்துகொள்ளுமாறு உத்தியோகபூர்வமாக அழைப்புவிடுத்தார்.

இந்நிலையில் திங்கட்கிழமை (27) மாலை 4 மணிக்கு தமது கட்சிக்கும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணிக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருந்த சந்திப்பு இரத்துச்செய்யப்பட்டிருப்பதாகவும், தான் விடுத்த அழைப்பு தொடர்பில்  தமிழரசுக் கட்சியின் முடிவு அறிவிக்கப்படும் வரை காத்திருப்பதற்குத் தீர்மானித்திருப்பதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

அத்தோடு ‘எமது அழைப்பு தொடர்பில் சிறிதரன் மற்றும் சத்தியலிங்கம் ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடியதாகவும், கட்சியின் ஏனைய உறுப்பினர்களுடன் இன்னமும் இதுபற்றிக் கலந்துரையாடவில்லை எனவும் சி.வி.கே.சிவஞானம் என்னிடம் கூறினார்.

மேலும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி களுவாஞ்சிக்குடியில் நடைபெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இதுபற்றி ஆராய்ந்து, முத்தரப்பு சந்திப்பில் தமிழரசுக் கட்சி பங்கேற்குமா, இல்லையா? என்ற தீர்மானத்தை அன்றைய தினமே அறியத்தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்’ என்றும் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டினார்.

எனவே இதுகுறித்து தான் செல்வம் அடைக்கலநாதனுடன் கலந்துரையாடியதாகவும், அதனையடுத்து எதிர்வரும் 8ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ முடிவு அறிவிக்கப்படும் வரை காத்திருப்பதற்குத் தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்த அவர், அம்முடிவின் பின்னர் தமது சந்திப்புக்கான புதிய திகதி நிர்ணயிக்கப்படும் என்றார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply