தமிழரின் அரசியல் தமிழரின் கைகளிலேயே இருக்கவேண்டும்!!

You are currently viewing தமிழரின் அரசியல் தமிழரின் கைகளிலேயே இருக்கவேண்டும்!!
தமிழரின் அரசியல் தமிழரின் கைகளிலேயே இருக்கவேண்டும் என்பது எவ்வளவு முக்கியமானதோ அதைவிட முக்கியமானது, சரியான தரப்பின், அதாவது தமிழ்த்தேசியத்தை உயிராய் நேசித்து, அதன்வழி நடக்கும் தரப்பிடம் இருக்கவேண்டியது.
நடைபெறவிருக்கும் உள்ளூராட்சிசபை தேர்தல்களின், சைக்கிளுக்கு அல்லது வீட்டுக்கு வாக்கு போடுங்கள் என சில உரையாடல் தளங்களில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
வாக்களிக்க முதல், நமக்கானவர்கள் யார், தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுத்துச்செல்லக்கூடியவர்கள் யார் என்ற தெளிவு வாக்காளர்களுக்கு இருப்பது இங்கு பிரதானமானது.
இந்த தெளிவை பெறுவது அப்படியொன்றும் கடினமான காரியமல்ல. 2009 இந்த பின்னரான காலப்பகுதியிலிருந்து தமிழரின் அரசியலை பெரும்பான்மை பலத்தோடு வைத்திருந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வாறெல்லாம் தமிழ்த்தேசிய அரசியல் சிதைப்புக்கு உடந்தையாகிப்போனது என்பதெல்லாம் வரலாறாக விரிந்து கிடக்கின்றன.
கூட்டமைப்பு எதற்காக உருவாக்கப்பட்டதோ அதன் தத்துவப்பாதையிலிருந்து 2009 இனவழிப்பின்பின் கூட்டமைப்பு விலகிச்சென்றதும், மாறிமாறி ஆட்சியிலமர்ந்த இனவாத / மதவாத இலங்கை அரசுகளோடும், பிராந்திய வல்லரசோடும் இணக்கமாக செயற்பட்டு, அவற்றின் நலன்களுக்காக செயற்பட்டதால், தமிழ்த்தேசிய அரசியல் சிதைக்கப்பட்டதால் இன்றைய அரசியல் இழிநிலையில் தமிழர்களும், தமிழர் தேசமும் வீழ்ந்துகிடப்பதை புரிந்துகொள்ள பட்டப்படிப்பு தேவையில்லை.
தமிழர்களின் பெரும்பான்மை அங்கீகாரத்தை தம்வசம் வைத்திருந்த கூட்டமைப்பு தமிழருக்காக நகர்த்தியது என்னவென்று கேள்வி எழுப்பப்பட்டால், விடை காண்பதற்கு ஏதுமில்லை. ஆனால், இரண்டே இரண்டு நாடாளுமன்ற உறுப்புரிமைகளை மாத்திரம் கொண்டிருந்தபோதும், வாய்ப்புக்கள் கிடைத்தபோதெல்லாம் சர்வதேச அரங்கில் தமிழருக்கான தீர்வுக்கான முறைப்பாடுகளை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி முன் வைக்கத்தவறவில்லை.
இதைவிடவும், தமிழ்த்தேசிய அரசியல் இன்றுவரை உயிர்ப்போடு இருக்கிறதெனில் அது, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுதியான அரசியலே என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
கூட்டமைப்பு ஏன் ஆரம்பிக்கப்பட்டது என்பதன் தத்துவத்தை கூட்டமைப்பு கைவிட்டிருந்தாலும், 2010 இலிருந்து அந்த தத்துவமே தமது அரசியலாக வரித்துக்கொண்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, அந்த கொள்கை அரசியலுக்காக அரசியல் தளத்தில் இழந்தவை ஏராளமானவை.
அதேநேரம், தமிழ்த்தேசிய கொள்கை அரசியலை கைவிட்டதனால், கூட்டமைப்பு அடைந்த சலுகைகள் குறிப்பிடத்தக்கவை.
இன்று கூட்டமைப்பு பிரிந்து நின்று பல கட்சிகளாக இருந்தாலும், 2009 இன் பின்னரான காலப்பகுதியில் தமிழரின் அரசியல் சிதைப்பை மனமறிந்து மேற்கொண்ட கூட்டமைப்பில் அப்போது அங்கம்வகித்த அத்தனை கட்சிகளுக்கும், இந்த அரசியல் சிதைப்பில் பங்குண்டு. அதற்கான கூட்டுப்பொறுப்பு அவர்களுக்கு உண்டு.
இன்று தென்னிலங்கை கட்சிகள், தமிழர் தேசத்தில் நிலைபெறுகின்றன என கவலைப்படுபவர்கள், இந்த நிலைக்கு கூட்டமைப்பில் அங்கம் வகித்த தமிழரசுக்கட்சி உட்பட, அத்தனை கூட்டுக்கட்சிகளுமே காரணம் என்பதை மறந்துவிடக்கூடாது. இதை மறைத்து, தமிழ்க்கட்சிக்கு வாக்குப்போடுங்கள் என்று சொல்வதன் போர்வையில், தமிழரின் அரசியல் சின்னாபின்னமாகிப்போவதற்கு காரணமான கட்சிகளுக்கு, தமிழரசு உட்பட வாக்களியுங்கள் எனக்கூறி, அத்தரப்புக்களையும் தமிழ்த்தேசிய தரப்புக்களாக அடையாளப்படுத்த முனைவது கடைந்தெடுத்த ஏமாற்று.
எனவே, கடந்தகால அரசியலை நினைவில் கொண்டு, தமிழருக்கானவர்கள் யார் என்பதில் தெளிவுபெறவேண்டிய வாக்காளர்கள், இன்றுவரை தமிழர் அரசியலை முன்னெடுத்துவரும் ஒரே தரப்பான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்துக்கு வாக்களித்து, தமிழரின் அரசியல், தமிழ்த்தேசிய அரசியலே என்பதை நிலைநிறுத்த வேண்டும்.
குகன் யோகராஜா
24.04.2025
பகிர்ந்துகொள்ள

Leave a Reply