வடக்கு – கிழக்கில் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்தார்கள் என்ற வரலாற்றை சிதைக்கும் வகையில் இன்று தென்னிலங்கை திட்டமிட்டு பல விடயங்களை அரங்கேற்றி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி வெலுத்தும் விதமாக மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘ஒர் இன அழிப்பின் ஆரம்ப இடம் வெளிக்கடை சிறைச்சாலை. ஒரு இனத்தின் மீது வன்முறைகள் ஆரம்பிக்கப்படுவது தான் இலங்கை வரலாற்றில் கூறப்படுகின்ற மிக மோசமான வன்முறையாக உள்ளது.
இந்த நாட்டில் பல படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. 1983ஆம் ஆண்டு இளைஞர் யுவதிகள் தமது உயிரை எமது தேசத்திற்காக தியாகம் செய்துள்ளனர்.
இது ஆயுதப் போராட்டமாக மாறி தற்போது ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு, மீண்டும் அகிம்சை ரீதியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு எமது இனத்தின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வரும் கால கட்டத்தில் இருக்கிறோம்.
எமது மக்களின் நிலங்கள், கடல் வளம், மண் போன்றவை அபகரிக்கப்படுகின்றன. நாங்கள் ஒரு காலத்தில் தமிழர்கள் பூர்வீகமாக வடக்கு கிழக்கில் வாழ்ந்தார்கள் என்கிற வரலாற்றை சிதைக்கும் வகையில் இன்று தென்னிலங்கை திட்டமிட்டு பல விடயங்களை அரங்கேற்றி வருகிறது.
இன்று நாங்கள் கட்சியாக ஒற்றுமையுடன் செயற்பட்டு வருகிறோம். நாங்கள் ஒற்றுமையாக இல்லை என்றால் எமது மக்களை காப்பாற்ற முடியாது.
எல்லா கட்சிகளும் ஒன்றினைந்து மக்களின் விடுதலைக்காக செயற்பட்டு மக்கள் விரும்புகின்ற ஒற்றுமையை பேணி எமது மக்களுக்காக குரல் கொடுக்கும் எமது மண்ணை மீட்டெடுக்கும் தார்மீக செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.