தமிழர்களை அடித்தும் வெட்டியும் படுகொலைசெய்யப்பட்ட மிருசுவில் படுகொலை!

You are currently viewing தமிழர்களை அடித்தும் வெட்டியும் படுகொலைசெய்யப்பட்ட மிருசுவில் படுகொலை!

2000ஆம் ஆண்டு டிசெம்பர் 19ஆம் திகதி அன்று யாழ்ப்பாணத்திலுள்ள மிருசுவிலில் இடம்பெற்ற சம்பவத்தில் எட்டுப் பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஞானச்சந்திரன், சாந்தன், ஞானபாலன் ரவிவீரன், செல்லமுத்து தெய்வகுலசிங்கம், வில்வராஜா பிரதீபன், சின்னையா வில்வராஜா, நடேசு ஜெயச்சந்திரன், மற்றும் வில்வராஜா பிரசாத் (வயது-5) ஆகிய எட்டுப் பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த எண்மரும் இராணுவத்தினர் 6 பேரால் படுகொலை செய்யப்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்டது. இதில் படுகொலை செய்யப்பட்ட பிரசாத்திற்கு அப்போது ஐந்து வயது மட்டுமே ஆகியிருந்தது.

இந்த எண்மரும் மிருசுவிலுள்ள தமது வீடுகளைப் பார்வையிடச் சென்ற போது இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு மலசலகூடக் குழிக்குள் புதைக்கப்பட்டனர்.

2000 ஆம் ஆண்டில் இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தீவிர போர் இடம்பெற்றிருந்தது. ஆனால் குறுகிய காலம் போர் நிறுத்தம் நடைமுறையிலிருந்தது. அப்போது மிருசுவிலுள்ள தமது காணிகளைப் பார்வையிடுவதற்காக சிலர் உடுப்பிட்டியிலிருந்து மிருசுவிலுக்குச் சென்றிருந்தனர். இவர்கள் வழமையாக தமது காணிகளைப் பார்வையிட்டு விறகுகளை எடுத்து வருவது வழமையான செயலாகும்.

தந்தை, ஐந்து மற்றும் 13 வயது இரண்டு பிள்ளைகள், பிறிதொரு தந்தை மற்றும் அவரது 13 வயது மகன், இரண்டு மைத்துனர்கள் ஆகியோர் மிருசுவிலில் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கின் பிரதான சாட்சியம் பொன்னுத்துரை மகேஸ்வரன் ஆவார்.

டிசம்பர் 19, 2000 அன்று காலை 10 மணியளவில் இவர்கள் நான்கு மோட்டார் சைக்கிள்களில் தமது சொந்த நிலங்களை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். விறகுகளைச் சேகரிப்பதற்காகவே இவர்கள் சென்றிருந்தனர்.

பி.ப 4 மணி, சிறுவன் ஒருவனுக்கு கொய்யாப்பழம் சாப்பிட ஆசையாக இருந்தது. அதனால் இவர்கள் அந்த மரத்திற்கு அருகில் சென்றனர். இதன் பின்னர் இவர்களை இரண்டு இராணுவத்தினர் சூழ்ந்து கொண்டு விசாரித்தனர். ஒருவன் துப்பாக்கி வைத்திருந்தான். மற்றவனின் கையில் கத்தி இருந்தது. இவ்விருவரும் திரும்பிச் சென்று மேலும் 2-3 பேருடன் அந்த இடத்திற்கு வந்தனர். தமது நிலங்களில் விறகு சேகரிப்பதற்காகச் சென்றவர்களில் ஒருவருக்கு ஒரு கை இல்லை. இதனை மிதிவெடி விபத்தின் போது இழந்திருந்தார்.

மிதிவெடி விபத்தில் கையொன்றை இழந்திருந்த நபரிடம் ஒரு மணித்தியாலமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இவர்கள் அனைவரது கண்களும் கட்டப்பட்டன.

பிரதான சாட்சியக்காரரான மகேஸ்வரனின் கண்கள் கட்டப்பட்ட போது, அவர் மயக்கமுற்றுவிட்டார். இதனால் இவர் மீண்டும் எழுந்திருக்கும் வரை என்ன நடந்ததென்பது தனக்குத் தெரியாது என இவர் கூறினார்.

தன்னை இராணுவத்தினர் மலகுழி நோக்கித் தூக்கிச் செல்வதைத் தான் உணர்ந்ததாகவும் சாட்சியக்காரர் தெரிவித்தார். மலக்குழியின் அருகில் இரண்டு இராணுவ வீரர்கள் நின்றிருந்தனர். மலக்குழியிலிருந்து இராணுவத்தினர் சத்தமிட்டதையும் தன்னால் கேட்க முடிந்ததாக இவர் கூறினார்.

தனக்கு என்ன நடக்கப் போகின்றது என்பதை அறிந்தவுடன் இவர் ஒருவாறு இராணுவத்திடமிருந்து தப்பிச் சென்றார். அப்போது மாலை ஆறு மணி. இவரது சாரத்தால் இவர் மிக இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்தார்.

இந்த இராணுவ வீரர்கள் குறிப்பிட்ட ஒரு பிளட்டூனைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் சம்பவம் இடம்பெற்ற தினத்திற்கு முதல்நாளே அந்த இடத்திற்கு வந்திருந்தனர். இந்தப் பிரதேசம் தொடர்பாக அவர்கள் பரிச்சயம் பெற்றிருக்கவில்லை.

 இந்த இடத்தில் எழும் எந்தவொரு துப்பாக்கிச் சத்தமும் சந்தேகத்தையே தோற்றுவிக்கும். அவ்வாறானதொரு காலப்பகுதியிலேயே இப்படுகொலை இடம்பெற்றது.

ஆகவே மகேஸ்வரன் இராணுவத்தினரிடமிருந்து தப்பியோடும் போது அவர்கள் மகேஸ்வரனைக் குறிவைத்துச் சுடமுடியவில்லை. மகேஸ்வரனுக்கு அந்த இடம் மிகவும் பரிச்சயமானது. அதனால் அவர் குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி தனது சித்தி வீட்டிற்குத் தப்பிச் சென்றார். 

இதனைத் தொடர்ந்து மலசலகூடக் குழி திறக்கப்பட்டது. ஆனால் அதற்குள் இறந்த ஆடு மட்டுமே இருந்தது. மகேஸ்வரன் தப்பிச்சென்றதை குற்றவாளிகள் அறிவர்.

அதனால் குற்றவாளிகள் தமது குற்றத்தை மறைப்பதற்காக கொலை செய்யப்பட்ட உடலங்களை அங்கிருந்து அகற்றிவிட்டனர். அதற்குப் பதிலாக இறந்த ஆடும் அதன் இரத்தமுமே அங்கே காணப்பட்டது.

இக்கொலை வழக்கை விசாரணை செய்த இராணுவப் பொலிஸ் தலைமை தொடர்ந்தும் முயற்சி செய்தது. இறுதியில் அந்த இடத்திலிருந்து இராணுவச் சீருடை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சீருடை கஜபா படைப்பிரிவின் சிறப்பு பிளட்டூனுக்குச் சொந்தமானதாகும்.

ஆகவே அவர்கள் இந்த பிளட்டூன் சிப்பாய்களிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். அண்மையில் ஆட்டை அடித்துக் கொன்றது யார் எனக் கேட்ட போது, இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளி தான் தானென ஒப்புக்கொண்டார்.

அதன்போது மகேஸ்வரன் உடனடியாகக் குற்றவாளியை இனங்கண்டு கொண்டார். இதன்பின்னர் குற்றவாளி கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது நடந்த விடயங்கள் அனைத்தையும் இராணுவப் பொலிஸாரிடம் பிரதான குற்றவாளி ஒப்புவித்தார்.

இதன்பின்னர் பொதுமக்கள் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்ட இடத்தை இராணுவக் பொலிஸார் கண்டுபிடித்தனர். இந்த இடம் ஆரம்பத்தில் சடலங்கள் புதைக்கப்பட்ட மலக்குழியிலிருந்து 500 மீற்றர் தூரத்திலிருந்தது. படுகொலை செய்யப்பட்டு நான்காவது நாள் சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டன.

இந்த வழக்குத் தொடர்பாக இராணுவத் தளபதிக்கு அறிக்கையிடப்பட்டது. இதன் பின்னர் இராணுவத் தளபதி இக்கொலை தொடர்பாக பொலிஸாருக்கு அறிவித்தார். 

இதனை ஆராய்வதற்கு அவர்கள் முயற்சிக்கவில்லை. இந்த வழக்கானது கொடிகாமம் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டது. 

கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் அவர்கள் அணிந்திருந்த உடைகளைக் கொண்டு உறவினர்களால் அடையாளங் காணப்பட்டன. ‘எல்லா உடலங்களின் கழுத்திலும் வெட்டுக் காயங்கள் காணப்பட்டன. இதில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களால் மட்டுமே இவ்வாறு வெட்டியிருக்க முடியும். 

அடையாள அணிவகுப்பில் மகேஸ்வரன் குற்றவாளிகளை அடையாளங் காண்பித்தார்.

மலக்குழியில் இருந்த இரத்தக்கறையானது மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அது மிருகம் ஒன்றின் இரத்தமல்ல எனவும் மனிதர்களின் இரத்தம் என்பதும் நிரூபணமானது. இதன் மூலம் மகேஸ்வரன் உண்மையைக் கூறுகின்றார் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. 

முக்கிய குறிப்பு 

​மிருசுவில் படுகொலை வழக்கின் சுனில் ரத்தநாயக்கவிற்கு மரண தண்டனையிலிருந்து  2020 ம் ஆண்டு இனப்படுகொலையாளி கோத்தாபய ராஜபக்சவால்  பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply