தமிழர் அடையாளங்களைத் திட்டமிட்டு இழக்கச் செய்யும் வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோட்டாபய ராஜபக்ஷவை விரோதியாகச் சித்தரித்துவிட்டு இப்போது, அபிவிருத்தியில் கைகோர்ப்பதாகக் கூறிவருகின்றது எனவும் அவர் சாடியுள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற மாவீரர் பெற்றோர்களுக்கான மாதாந்த வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “பொங்கல் என்பது தமிழர் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்று. இவ்வாறு தமிழர் அடையாளங்களைத் திட்டமிட்டு இழக்கச் செய்யும் வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
நாம் எமது அடையாளங்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். இன்று தமிழர்கள் எனும் விடயத்தை பேச இடமற்றவர்களான சூழல் காணப்படுகின்றது.
நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை பாரிய விரோதியாக தமிழ் மக்கள் மத்தியில் சித்தரித்தார்கள். இன்று அபிவிருத்தியில் கரம் கோர்த்து பயணிக்கத்தயார் என கூட்டமைப்பினர் கூறுகின்றனர்.
தமிழ் மக்கள் தமக்கு ஆணையைத் தரவேண்டும் எனப் பேசியுள்ளார்கள். ஆனால் தங்களுக்குக் கிடைத்த ஆணையை அவர்கள் சரியாகப் பயன்படுத்தவில்லை” என்று தெரிவித்துள்ளார்.