யாழ்ப்பாணம்
வட்டுக்கோட்டைப் சிறீலங்கா காவல் நிலையம் ஓர் சித்திரவதைக் கூடமாகவே செயற்பட்டு வந்துள்ளதாக சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சித்திரவதைக்குள்ளான நிலையில் உயிரிழந்த நாகராஜா அலெக்ஸ் என்ற இளைஞனை சித்திரவதைக்கு உள்ளாக்கிய இடத்தில் நேற்றையதினம் மாலை (28) ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் உடனிருக்க யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ரி.மேனன் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொண்ட குழு விசாரணைகளை முன்னெடுத்தது.
இந்நிலையில் நேற்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொடர்பில் சட்டத்தரணி க.சுகாஷ் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்,
“நேற்றைய தினம் நீதிமன்றத்தின் கட்டளைக்கமைவாக வட்டுக்கோட்டைப் பொலீஸ் நிலையத்திற்குச் சென்று அலெக்ஸ் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட தாக்கப்பட்ட தடுத்துவைக்கப்பட்ட இடங்களைச் சாட்சி காண்பித்தார்.
சாட்சியின் பாதுகாப்பிற்காக நீதிமன்ற அனுமதியோடு நானும் சென்றிருந்தேன்.
அங்கு அவதானித்தவற்றின் அடிப்படையில் வட்டுக்கோட்டைப் பொலீஸ் நிலையம் சட்ட அடிப்படையிலான காவல் நிலையமாக அன்றி ஓர் சித்திரவதைக் கூடமாகவே செயற்பட்டு வந்துள்ளது என்பதை உணரமுடிகின்றது.
நீதிமன்ற விசாரணைகள் பாதிப்படையக்கூடாது என்பதற்காக ஏனைய விடயங்களை வெளிப்படுத்துவதை இவ்விடத்தில் தவிர்த்துக் கொள்கின்றேன்” எனவும் தெரிவித்தார்.