தமிழர் தாயக அரசியல் கள நிலவரமும், பிரித்தாளும் சிங்களப் பேரினவாதமும்,ஒரு ஆழமான நேர்கொண்ட பார்வை!

You are currently viewing தமிழர் தாயக அரசியல் கள நிலவரமும், பிரித்தாளும் சிங்களப் பேரினவாதமும்,ஒரு ஆழமான நேர்கொண்ட பார்வை!

தமிழர் தாயக அரசியல் கள நிலவரமும், பிரித்தாளும் சிங்களப் பேரினவாதமும்,ஒரு ஆழமான நேர்கொண்ட பார்வை   

சிறிலங்காவின் சனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் வடக்கு விஜயமும், தமிழ்த்தேசியத்தை விட்டுக்கொடுத்து தாரைவார்க்க தயாராகும், தமிழ்ப் பிரதிநிதிகளின் தில்லாலங்கடி ஆட்டமும் தற்போது அரங்கேற்றப்படும் அரசியல் நாடகமாகும்.

சிறிலங்கா சனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழர்களின் தாயகத்திற்கு ஒருமாத கால இடைவெளிக்குள் இரண்டு தடவைகள் விஜயங்களை மேற்கொண்டிருக்கின்றார்.

முதல் விஜயத்தினை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களை மையப்படுத்தி கடந்த மே மாதத்தின் இறுதிப்பகுதியிலும், இரண்டாவது விஜயத்தினை மன்னார் மாவட்டத்தினை மட்டும் மயப்படுத்தி சூன் மாதத்தின் 15,16ஆம் நாட்களிலும் மேற்கொண்டிருந்தார்.

இந்த விஜயங்களின்போது,  ரணில் விக்கிரமசிங்க நெதர்லாந்து நாட்டின் நிதிப் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட வைத்தியசாலைக் கட்டடங்களைத் திறந்து வைத்தல், ‘உறுமய’ என்ற திட்டத்தின் கீழ் காணி உரிமைகளை வழங்குதல், இளைஞர்களுடன் சந்திப்புக்களை நடாத்துதல், திருத்தலங்களுக்கு விஜயம் செய்தல், அபிவிருத்தி சார்ந்த வாக்குறுதிகளை அளித்தல் ஆகியவற்றைக் கனகச்சிதமாக  செய்து முடித்திருக்கின்றார்.

மேற்படி செயற்பாடுகள் அனைத்தும் மீண்டும் சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியாக மக்களின் ஆணையுடன் கதிரைக்கு வரவேண்டும்  என்ற  ரணிலின் வாழ்நாள் வேணாவாவினை அடைவதற்கான தளங்களாகவே உள்ளன என்பது வெளிப்படையான விடயமாகும்.

ஆனால், ரணிலின் இந்த விஜயத்தினை அடுத்து தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் சில பிரதிபலிப்புக்கள் நிகழ்ந்திருக்கின்றன. அவற்றை கவனத்தில் கொள்வது மிகவும் முக்கியமானதொரு விடயமாகின்றது.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ரணில் பங்கேற்ற எந்தவொரு நிகழ்விலும் பங்கேற்றிருக்கவில்லை. அதேநேரம், அவருடைய விஜயம் இடம்பெற்ற சமகாலத்தில் ரணில் விக்கிரமசிங்க தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு எதையும்  தரமாட்டார் என்ற தொனிப்பட காட்டமான கருத்துக்களை மட்டும் அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தார்.

ஆனால், ரணிலின் விஜயத்திற்கு முன்னதாக பாராளுமன்றத்தில் உள்ள சனாதிபதியின் அலுவலகத்திற்கு சிவஞானம் சிறீதரன், தனது நெருங்கிய சகாவான சாள்ஸ் நிர்மலநாதனுடன் சென்று உரையாடி இருக்கின்றார்.  உரையாடப்பட்ட விடயங்கள் எவையென்பது தெரியாது.

இருந்தாலும் கூட, பாராளுமன்றிலுள்ள சனாதிபதி அலுவலத்திற்குச் சென்று உரையாடும்போது சிறீதரனுக்கு ஏற்படாத கொள்கை முரண்பாடு தனது சொந்தத் தேர்தல் மாவட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கும் நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலம் எவ்வாறு ஏற்படலாம் என்பது பெருங்கேள்வி?

அடுத்தது, சுமந்திரன் இயல்பாகவே கொழும்பு மையவாத அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் முக்கிய நபர்.இவர்,  2015முதல் 2019வரையிலான காலப்பகுதியில் ரணிலின் நிழலாக இருந்தார் என்பது அனைவரும் அறிந்த விடயம்.புதிய அரசியலமைப்பின் ஊடாக ஒற்றையாட்சிக்குள் தமிழர்களை இரண்டறக் கலந்து விடுவதற்காகக் கடுமையாக உழைத்தவர்.

பிற்காலத்தில் ரணில் சனாதிபதியாக வந்ததும், அவருடன் முரண்பட்டதாக காண்பித்துக் கொண்டார். அதற்குத் துணையாக சாணக்கியனையும் வைத்துக்கொண்டார். ஆனால்,பொதுப்படையில் முரண்பாடுகள் காணப்பட்டாலும் ரணிலுடனான தனிப்பட்ட உறவுகள் நீடித்துக்கொண்டே இருந்தன என்பதற்கு ரோயல் கல்லூரியின் கிரிக்கெட் போட்டியில் இருவரும் அருகருகே அமர்ந்திருந்து போட்டியைக் கண்டு களித்தமை சான்றாக அமைகின்றது.

இவ்வாறான நிலையில், தாயகத்துக்கு விஜயம் செய்த ரணில் விக்கிரமசிங்கவின் அனைத்து நிகழ்வுகளிலும் சுமந்திரன் பங்கேற்றார். அதிலும், யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ ஆய்வுகூடத் திறப்பு விழாவில் பங்கேற்று ‘2005ஆம் ஆண்டு தமிழ் மக்கள் சனாதிபதி தேர்தலில் வாக்களிப்பில் பங்கேற்காமைக்கு வருத்தத்தினை தெரிவிக்கின்றேன்’ என்றும் அதனைப் பொறுத்துக்கொண்டமையைப் பாராட்டுவதாகவும் ரணிலிடம் தெரிவித்தார்.

குறித்த தருணத்தில்,சுமந்திரனின் உண்மையான உட்கிடக்கை வெளிப்பட்டது. 2005ஆம் ஆண்டு சனாதிபதி தேர்தலைப் புறக்கணிக்கும் தீர்மானத்தினை எடுத்தது தமிழீழத் தேசியத்தலைவர்  மேதகு பிரபாகரன் அவர்கள் தான். தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினை ஏகப்பிரதிநிதிகளாக முழுமையாக  ஏற்றிருந்தனர். அவ்வாறான சூழமைவில் தமது பிரதிநிதிகளின் தீர்மானத்தினை தமிழ் மக்கள் ஏற்றுச் செயற்பட்டனர்.

அவ்வாறிருக்கையில்,  சுமந்திரனின் காழ்ப்புணர்ச்சியினாலும், பதவி மோகத்தினாலும், தமிழீழ விடுதலைப்புலிகள் என்றாலே, எதிர்நிலைப்பாட்டையும், ஒவ்வாமையையும் கொண்டிருக்கும் சுமந்திரன், 2005 தீர்மானத்திற்கு வருத்தம் தெரிவிப்பதை எவ்வாறு நோக்குவது என்ற கேள்வி எழுகின்றது. அதேநேரம், ரணிலுடன் முரண்பாடுகளை கொண்டிருக்கின்றேன் என்று பொதுவெளியில் கூறும் சுமந்திரன் எதற்காக ரணிலிடம் தசாப்தத்திற்கு முன்னர் தேசியத்தலைவரால் சரியாக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

ஆகவே, ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சுமந்திரனுக்கும் நல்லுறவு (கள்ளவுறவு) நீடிக்கின்றது என்பது ஒருபுறமிருக்கையில், ரணில் பக்கம் தமிழ் மக்களை நிறுத்தும் சூழ்ச்சிகரமான சிந்தனையும் இன்னமும் அவரிடத்தில் இல்லாமில்லை என்பதும் அந்தக் கருத்துக்கள் மூலம் வெளிப்பட்டுள்ளது என்பது தான் யதார்த்தமான விடயமாகின்றது.

சுமந்திரனின் ரணில் மையவாதக் கருத்துக்கள் தொடர்பில் மறுதினமே விமர்சனங்கள் எழவும் உடனடியாக கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் ரணிலை தாக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார். ஆனால் அதன் பின்னர் யாழ் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மீண்டும் 2005ஆம் ஆண்டு சனாதிபதிதேர்தல் புறக்கணிப்புப் பற்றி வெளியிட்ட கருத்துக்கள் ஊடாக அவருடைய உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது.

ஆகவே, சுமந்திரன், ரணில் எதிர்ப்புவாதி என்ற பிம்பத்தை தமிழர்கள் மத்தியில் கட்டியெழுப்பினாலும் உண்மையிலேயே அவர் தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் கோட்பாட்டிற்கான எதிர்ப்புவாதி என்பதையே சொல்லிலும் செயலிலும் வெளிப்படுத்தி வருகின்றார். அத்துடன் கொழும்பு  மையவாத அரசுக்கு முண்டுக்கொடுக்கும் செயற்பாட்டைத் தான் அவர் அரசியல் வாழ்நாள் பூராகவும் செய்து கொண்டிருக்கின்றார்.

இதற்கடுத்தபடியாக இயக்கங்கள்(ஒட்டுக்குழுக்கள்) இரண்டின் தலைவர்கள் ரணிலைச் சந்தித்தார்கள். அதில் ஒருவர்  சித்தார்த்தன். இவர்,யாழ்ப்பாணத்தில் வைத்து ரணிலைச் சந்தித்து உரையாடியுள்ளார். இதன்போது ராயபக்சக்களின் ஆதரவுடன் தேர்தலில் களமிறங்கினால் உங்களுக்கு தமிழ் மக்களின் வாக்குகள் கிடைப்பது கடினமாக இருக்கும்.

இப்போது பிளவுபட்டுள்ள தமிழ் மக்களின் வாக்குகளில் பெரும்பான்மையானவை உங்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கையில், ராயபக்சக்களை அரவணைத்துக் கொண்டு வந்தீர்கள் என்றால் ராசபக்சக்களுக்கு எதிர் மனோநிலையில் உள்ள தமிழ் மக்கள் ஒன்றிணைந்து விடுவார்கள். அதன் பின்னர் எம்மால் ஒன்றும் செய்யமுடியாது. நாமும் மக்கள் பக்கம் தான் நிற்க வேண்டிவரும் என்று கூறியுள்ளார்.

இந்தக் கருத்தினை நன்றாக செவிமடுத்த ரணில், உடனடியாகக் கேட்ட விடயம் தமிழ் பொதுவேட்பாளர் விடயம் எப்படி உள்ளது. அதில் தீவிரமாக இருப்பவர்கள் யார்? உடனேயே சித்தார்த்தன், விக்னேஸ்வரனின் பெயரைக் கூறவும் மறுதினமே விக்னேஸ்வரனின் வீட்டுக்குச் சென்றார் ரணில். அங்கே விக்னேஸ்வரனுடன் உரையாடிவிட்டு, பொதுவேட்பாளர் ஒருவரை உங்களால் நிறுத்தமுடியுமா என்று ஒருகேள்வியைத் தொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

ஏனென்றால், ரணில் விக்னேஸ்வரனை நன்கு அறிந்தவர். கொழும்பில் இருவரது வீடுகளும் அருகருகாமையில் தான் உள்ளன. அதனைவிடவும் விக்னேஸ்வரனிடம் ஒருபழக்கம் உண்டு. உங்களால் செய்யமுடியுமா என்று அவருடைய உள்ளுணர்வை உசுப்பி விட்டால் விக்கி அதனையே முதற்காரியமாகச் செய்வார்.

ரணில் இந்த உசுப்பலை சாமர்த்தியமாக (சூழ்ச்சி) தான் செய்துவிட்டுள்ளார். இப்போது,சனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதில் விக்கி உறுதியாக உள்ளார். ஒருவேளை சிவில் அமைப்புக்களின் தமிழ் பொதுவேட்பாளர் முயற்சி பின்னடைவுகளைச் சந்தித்தாலும் கூட விக்கி தான் களத்தில் இறங்குவதற்கோ, தனது கட்சியை இதனுள் முழுமையாக ஈடுபடுத்துவதற்கோ கூட தயங்கப்போவதில்லை என்பது தெளிவாகின்றது.

அதுமட்டுமன்றி, சனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் கயிறிழுத்துக்கொண்டிருந்த செல்வம் அடைக்கலநாதனும், சித்தார்த்தனும் ரணிலின் யாழ்.விஜயத்தின் பின்னரே திடீரென தமது கட்சிகளின் மத்திய குழுவைக் கூட்டிவிட்டு பொதுவேட்பாளர் விடயத்தை  ஆதரிக்கும் நிலைப்பாட்டினை அறிவித்தனர்.

அதன்பொருள் என்னவென்றால், ராயபக்சக்களின் ஆதரவுடன் வரும் ரணிலுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதால் தமிழர்களின் வாக்குகள் ரணிலுக்கு எதிராக களமிறங்கும், எனவே சஜித்,அனுரகுமார உட்பட எந்தவொருவருக்கும் தமிழரது வாக்குகள் செல்லாது தடுப்பதே ஆகும். ஆக, தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் செல்வம்,சித்தார்த்தனின் முடிவு என்பது ரணிலை வெற்றி பெறச்செய்வதற்கான ஒரு மூலோபாயமே ஆகும்.

இதேநேரம், முல்லைத்தீவுக்குச் சென்ற சனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தேநீர் விருந்துடன் நடைபெற்ற சந்திப்பில் செல்வம் அடைக்கலநாதன் ‘எப்போது மன்னாருக்கு பரிசுப்பொருட்களுடன் வருகை தரவுள்ளீர்கள்’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு மடுமாதாவை தரிசிப்பதற்கு வருவேன் மன்னாரை நான் புறமொதுக்கவில்லை என்று ரணில் பதிலளித்துள்ளார்.

அதேபோன்று மன்னார் மாவட்டத்துக்கு மட்டும், ரணில் கடந்த 15,16இல் சென்றுள்ளார். அப்போது இளைஞர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினருடனான சந்திப்புக்கான நபர்களை ஏற்பாடு செய்தமை உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் செல்வம் அடைக்கலநாதனும், சாள்ஸ்சும் தான் செய்துள்ளனர்.

குறிப்பாக, இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியாவில் நடைபெற்றுக்கொண்டிருந்த தருணத்தில் அங்கு கலந்து கொண்ட சாள்ஸ் நிர்மலநாதன் சொற்ப நேரத்தில் அங்கிருந்து வெளியேறி ரணிலின் நிகழ்வில் கலந்து கொள்வதற்காகச் சென்றுள்ளார்.

இதேநேரம், செல்வமும், சாள்சும்  ரணில் பங்கேற்ற அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்றமை ஒருபுறமிருக்கையில், மன்னார்த்தீவு பிரதானமாக முகங்கொடுக்கும் விடத்தல்தீவு பிரச்சினை, கனிய மணல் அகழ்வுப் பிரச்சினை, அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள காற்றாலைப் பிரச்சினை உள்ளிட்டவை தொடர்பில் எந்தவிதமான பிரதிபலிப்புக்களையும் செய்யவில்லை.

ஆகக்குறைந்தது, இந்திய மீனவர்களல் பாதிக்கப்படும் மன்னார் மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில்கூட சனாதிபதியுடன் அவர்கள் உரையாடவில்லை. வெறுமனே வைத்தியசாலை அபிவிருத்தியையும், வீதி அபிவிருத்தியையும் மட்டும் தான் கோரியுள்ளனர்.

ஆகவே,மேற்படி அனைத்துச் செயற்பாடுகளில் இருந்தும் வெளிப்படுவது யாதெனில் ஒற்றையாட்சியை முன்னலைப்படுத்தும் தென்னிலங்கை சிங்களத் தலைமையை ஆதரிப்பது தான் தமிழ்த்தேசியத்தைக் கைவிட்ட  அரசியல்வாதிகளின் நோக்கமாக உள்ளது. ஆனால்,அதனை அவர்களால் பகிரங்கமாகச் செய்ய முடியாது. ஏனெனில் அடுத்து பாராளுமன்றத்துக்கான தேர்தல் வருவதால் தங்களின் ஆசனங்களைப் பாதுகாக்க வேண்டியுள்ளது.

ஆகவே தான், திரைமறைவில் இருந்துகொண்டு தமிழ் பொதுவேட்பாளர் என்றும், சனநாயகத்தை உறுதி செய்வதற்காகச் சனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றும், தென்னிலங்கை வேட்பாளர்களுடன் பேரம்பேச வேண்டும் என்றும் வெவ்வேறு வடிவங்களில் தமது நகர்வுகளைச் செய்கின்றார்கள்.

அவையொன்றும் தாயகத் தமிழர்களை மையப்படுத்திய நகர்வுகள் அல்ல. அனைத்துமே கொழும்பு மையவாத அரசியல்  நகர்வுகளே. அது தான் தமிழ்த் தேசியத்திற்குள் ஒழிந்திருக்கும் அரசியல்வாதிகளின் சீத்துவக்கேடு. எனவே ஆக்கிரமிக்கப்பட்ட தமிழீழத்தை மீட்டெடுக்கப் பல்லாயிரம் உயிர்விதைகளை விதைத்து நடுகை செய்த வீரஞ்செறிந்த மாபெரும் தமிழ்த்தேசிய இனம் கடந்தகால வரலாறுகளை முன்னிறுத்தி முடிவுகளை எடுக்கும் எந்த மாயவலையிலும் சிக்காது, தமிழீழ விடுதலைக்கோட்பாடு என்னும் சித்தாந்தம் மட்டுமே தமிழினத்தைச் செம்மையாக வழிநடாத்தும்.

அவ்வழியில் பயணிப்பதே தமிழினத்தின் வரலாற்றுக் கடமை ஆகும்.

–  அனைத்துலகச்  சிந்தனைப்பள்ளி

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments