தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் குறித்து கலந்துரையாடுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சி அறிவித்ததை அடுத்து, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள் எதிர்வரும் 27 ஆம் திகதி சந்தித்து தீர்வுத்திட்டம் தொடர்பில் ஆராயவுள்ளன.
புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் தமிழ்த்தேசியக் கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளின் அடுத்தகட்டமாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இம்மாதத்தொடக்கத்தில் பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் ஆரம்பிக்கப்படும்போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து பொதுவானதொரு தீர்வுத்திட்டத்தை முன்மொழிவது குறித்து நாளை மறுதினம் சனிக்கிழமை (25) இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
இருப்பினும் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தின்போது, தமிழர்களுக்கான தீர்வுத்திட்டம் குறித்து ஆராய்வதற்கும், அதனைத்தொடர்ந்து தமிழ்த்தேசியப்பரப்பில் உள்ள ஏனைய கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்குமென கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியில் புதன்கிழமை (22) பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை சந்தித்து உரையாடிய சிறிதரன், தமது கட்சியின் உள்ளகத் தீர்மானத்துக்கு அமைய எதிர்வரும் 25 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட சந்திப்பில் தம்மால் கலந்துகொள்ளமுடியாது என அறிவித்தார்.
அதனையடுத்து ஏற்கனவே ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் கோரப்பட்டிருந்ததற்கு அமைய எதிர்வரும் 25 ஆம் திகதி நடாத்த உத்தேசிக்கப்பட்டிருந்த சந்திப்பு 27 ஆம் திகதிக்குப் பிற்போடப்பட்டிருப்பதாகவும், அன்றைய தினம் மாலை 4.00 மணிக்கு தமது கட்சியும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பிரதிநிதிகளும் யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடவிருப்பதாகவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.