நாவறண்டு நாவறண்டு
நான்காம் நாள்
நல்லூர்க்கந்தன்
முன்றலிலே
பசித்தீயினால்
தன்னைத்தானே
அன்னை மண்ணிற்காய்
சுட்டெரிக்கும்
சூரியனின்
தியாகப்பயணம்
தொடர்கிறது!
உலகமெங்கும்
அறப்போராட்டத்தின் அனல்
கொழுந்துவிட்டுப் படர்கிறது!
முக்கிய பத்திரிகைகளின்
தலைப்புச்செய்தியாக
தீலீபத்தின் தியாகம்!
உடல் இயங்க மறுக்கின்ற
நிலையிலும்
மக்களுக்காக
பார்த்தீபனின்
உறுதியான
வார்த்தைகள்
ஒலிபெருக்கியால்
ஓங்கி ஒலிக்கிறது!
அது
விளக்கு அணைய முன்னம்
பிரகாசமாக
எரியுமாம்
அப்படித்தான்
நானும்
உற்சாகமாக
இருக்கின்றேன்!
இன்றும்
தாரளமாக என்னால்
பேசமுடிகிறது
எனக்கு விடைதாருங்கள்!
உருக்கமாக
உணர்வுகளை
உரசி காற்றில் கரைந்த வார்த்தைகள்
இருதயங்கள் ஒவ்வொன்றையும்
ஓங்கி அறைந்தது!
மீண்டும்
அவரது உதடுகள்
உச்சரிக்கையில்!
போராடுங்கள்!
வீரர்கள் உறுதியோடு
போராடுவார்கள்!
உண்ணாநிலைப்போராட்டத்தினை
நிறுத்தக்கோராதீர்கள்!
இது
நானும் தலைவரும் சேர்ந்து
எடுத்த முடிவு!
இப்படித்தான்
இறுக்கமாக
வெளிக்கிளம்பியது
உரிமைக்குரல்!
இந்த நிலையிலும்
வெள்ளையனை விரட்டப்போராடியவர்கள்
வாய்திறக்கவில்லை என்ற
செய்திதான்
தேசத்தின் குரலால்
திலீபனிடம்
தெரிவிக்கப்படுகிறது!
அறவழியால்
தங்கள்
விடுதலைக்கதவை
திறந்த நாடு
அடிமைப்பட்டுக்கிடக்கும்
இனத்தின்
சுயவுரிமையை
மதிக்காது
சுய அரசியலுக்காய்
கயமைத்தனத்தில்
இருந்தமை
திலீபனின்
இதயத்துடிப்பை
இன்னும்
அதிகமாக்கியது!