ஈழத்தமிழர்கள்மீது நடத்தப்பட்ட இனவழிப்பை, இனப்படுகொலையென கனேடிய நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளததாக தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம், தமிழினவழிப்பை ஏற்றுக்கொண்டு, அதை இனப்படுகொலையே என அங்கீகரித்த முதல் நாடாக கனடா திகழ்கிறது.
தமிழின அழிப்புநாளான “மே – 18” (2022) அன்று கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரான திரு. ஹரி ஆனந்தசங்கரி இதற்கான பிரேரணையை முன்மொழிந்திருந்ததுடன், நாடாளுமன்றத்தின் அனைத்துக்கட்சிகளும் ஏகமனதாக இப்பிரேரணையை ஏற்றுக்கொண்டதால் இப்பிரேரணை கனேடிய நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டதெனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
கனேடிய நாடாளுமன்றத்தின் இவ்வங்கீகாரம், தமிழினவழிப்புக்கான நீதிகோரலுக்குரிய பெரும்பயணத்தின் முக்கியமான திருப்பமாக கருதப்படுவதுடன், உலகின் வேறு நாடுகளும் கனடாவை பின்பற்றக்கூடிய சாத்தியங்கள் கூடி வரும்போது, தமிழினவழிப்புக்கான நீதிகோரல் மேலும் வலுப்பெறுவதோடு, இனவழிப்புக்கான பொறுப்பை வகிப்பவர்கள் சர்வதேச சமூகத்தால் தண்டிக்கப்படும் வாய்ப்புக்களும் விரைவு படுத்தப்படும் எனவும் நம்பிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.