தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை அங்கீகரிக்கும் தனிநபர் பிரேரணை கனடா – ஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளமைக்கு இலங்கை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Bill 104 என்ற இந்தச் சட்டமூலம் குறைபாடுள்ள முன்மாதிரியாகும். ஆதாரங்களின்றி அனுமானங்களின் பிரகாரம், அப்பட்டமான பொய்களை அடிப்படையாகக் கொண்டதாக இது அமைந்துள்ளது என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையாலோ, வேறெந்தவொரு உலக நாடுகளாலோ அல்லது இலங்கையின் நட்பு நாடான கனடாவினாலோ இலங்கையில் இனப்படுகொலை நடந்ததற்கான ஆதாரங்கள் எதனையும் இதுவரை கண்டறிய முடியவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது. இலங்கை தமிழர் இனப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை அங்கீகரிக்கும் தனிநபர் பிரேரணை கனடா – ஒன்ராறியோ சட்டமன்றத்தில் ஆளும், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் கடந்த மே 6-ஆம் திகதி வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இதன்மூலம் மே-18 ஆம் திகதியுடன் முடிவடையும் 7 நாட்கள் ஒன்ராறியோவில் ஆண்டுதோரும் தமிழர் இனப்படுகொலை அறிவூட்டல் வாரமாக கடைப்பிடிப்பதற்கான சட்ட ரீதியான அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஒன்ராறியோ சட்டமன்ற தமிழ் உறுப்பினர் விஜய் தணிகாலம் தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரம் என்ற தனிநபர் பிரேரணையை 2019ஆம் ஆண்டு சமர்பித்தார்.
இந்த சட்டமூலமாக்கல் மீதான மூன்றாம் வாசிப்பில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அதனை ஆதரித்து வாக்களித்து நிறைவேற்றினர்.
வியாழக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட ஆளும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர்கள் தமிழர்கள் மீதான இனப்படுகொலை குறித்தும், தமிழர்கள் தொடர்ந்து எதிர் கொள்ளும் உரிமை மறுப்புகள் குறித்தும் பேசினர்.
தொடர்ந்து ஒளுநரின் ஒப்புதல் பெறப்பட்டதும் இந்தத் சட்ட மூலம் (Bill 104)மாகாண சட்ட வரைபில் உத்தியோகபூர்வமாக இணைந்துக் கொள்ளப்படும்.
இதேவேளை, இந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டமை குறித்து பெருமிதம் அடைவதாக தீா்மானத்தை முன்வைத்த ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாலம் தெரிவித்துள்ளார். கனடா மற்றும் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு இது ஒரு வரலாற்று நிகழ்வு எனவும் அவா் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தீா்மானத்தை நிறைவேற்ற ஒத்துறைத்த ஒன்ராறியோ அரசாங்கம், முதல்வர் டக் போர்ட் மற்றும் ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி எனவும் அவா் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையிலேயே இந்தத் தீா்மானத்துக்கு இலங்கை அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இலங்கைக்கு வெளியே உலக நாடொன்றில் இலங்கை இனப்படுகொலையை சட்ட ரீதியாக ஏற்று அங்கீகரித்து நிறைவேற்றப்பட்ட முதல் தீா்மானம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.