கடந்த 16/02/2022 பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் நெதர்லாந்து நாட்டினை ஊடறுத்து பெல்சியத்தினை வந்தடைந்தது. இன்று 21/02/2022 அன்வேர்ப்பன் மாநகரத்தில் அமைந்துள்ள தமிழீழ மாவீரர்கள் மற்றும் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்ட நினைவுக்கல்லறையில் இருந்து தொடர்ந்து பெல்சியத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலை எழுச்சிகரமாக வந்தடைந்தது.
கொட்டும் மழையிலும் கடுங்குளிர் காற்றிலுமாக கவனயீர்ப்பு போராட்டம் தமிழீழ மக்களால் எழுச்சிகரமாக கொட்டொலி எழுப்பி நடைபெற்றது.
சம நேரத்தில் தெற்காசிய விவகார தலைமைப் பொறுப்பதிகாரி, மனித உரிமைககள் குழுத்தலைவர் மற்றும் சிறிலங்காவிற்கான பொறுப்பதிகாரிகளுடன் இணையவழிச் சந்திப்பு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து ஐரோப்பிய பாராளுமன்ற தலைவியின் அரசியல் ஆலோசகர் மற்றும் அதிகாரிகளுடனும் , ஐரோப்பிய ஒன்றிய ஆலோசனை அவையில் தலைமைத்துவம் வகிக்கும் பிரான்சு நாட்டுடனும் முக்கிய சந்திப்புக்கள் நடைபெற்றன.
இவ்வறவழிப் போராட்டமானது சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே நிரந்த தீர்வு என எதிர்வரும் 49 வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரினை நோக்கி பயணிக்கும் இவ்வேளையில் 26/02/2022 சனிக்கிழமை யேர்மனி நாட்டில் லாண்டோ மாநகரத்தில் நடைபெறும் மனிதச்சங்கிலிப் போராட்டத்திலும் இணைந்து தொடர்ந்தும் இலக்கு நோக்கி பயணிக்கும்.
“மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது”
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.