இலங்கையில் , கடந்த 65 ஆண்டுகளாக, அரசினால் திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்ட தமிழின அழிப்பில், இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஆனாலும் இறுதியாக முள்ளிவாய்க்காலிலும் , ஏனைய சில தமிழின அழிப்பு சம்பவங்களிலும் கொல்லப்பட்ட மக்களிற்கான நீதிவேண்டி உலகெங்கும் தமிழர்கள் அறைகூவல் விடுத்து வருகின்றனர். இவை தொடர்பாக மேற்குலக நாடுகள் தற்போது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன .
அந்தவகையில் 2014 ஆம் ஆண்டளவில் , ஐக்கியநாடுகள் மனிதவுரிமை பேரவையால் அமைக்கப்பட்ட போர்க்குற்றங்களிற்கான நீதிகோரும் பொறிமுறை அமைப்பில், பின்லாந்தின் முன்னாள் அதிபர் மார்ட்டி அத்திசாறியும் இடம்பெற்றிருந்தார். சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற அத்திசாறி, இனமுரண்பாடுகளிற்குள்ளான நாடுகளில் சமாதானத்தை கொண்டுவர கடுமையாகப் பாடுபட்டவர். பசுமைக்கட்சியின் தலைவராகவுள்ள , பின்லாந்தின் தற்போதய வெளியுறவு அமைச்சர் கூட , விடுதலைப்போர்கள் நடைபெற்ற நாடுகளில் பணியாற்றியவர்தான். பின்லாந்தில் குடியேறிய வெளிநாட்டவர்களின் கோரிக்கைகளை நியாயமாக பரிசீலிக்கக் கூடியவர். தற்போதய சனாதிபதி சவோலி நீனிஸ்தோ , பிரதமர் சன்னா மரீன் போன்றவர்களும் , மனிதவுரிமை சார்ந்த விடயங்களில் நியாயமான கரிசனையைக் கொண்டவர்கள் . எனவே அனைத்துலகெங்கும் தமிழர்களால் விடுக்கப்படும் தமிழின அழிப்பு என்ற காத்திரமான விடயத்தை பின்லாந்து அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக அனைவரும் ஒன்றுதிரண்டு குரல் கொடுக்க வேண்டிய தருணம் இது. சரியான ஒரு பொறிமுறை ஊடாக எமது கோரிக்கையை முன்வைப்போம்.