தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டுத் தொடர்ந்து போராடுவோம்!

You are currently viewing தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டுத் தொடர்ந்து போராடுவோம்!

தமிழின அழிப்பின் நினைவு நாளான மே18 இல் சிங்களப் பேரினவாத அரசபயங்கரவாதத்தினால் படுகொலைசெய்யப்பட்ட மக்களை நினைவேந்தி எழுச்சிகொள்ளும் இந்நாளில்,  முள்ளிவாய்க்காலில் உச்சம் பெற்ற இனப்படுகொலையின் பதினோராவது ஆண்டிலும் நீதிக்காகப் போராடிவருகின்றோம்.

அகிம்சைவழிப் போராட்டங்களுக்கு எதிரான ஆயுத ஒடுக்குமுறையும் உலகப்போர்கள் மனித குலத்திற்குக் கற்றுத்தந்த கசப்பான வரலாற்றுப்பாடங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதற்காக, தோற்றம் பெற்ற உலகமையமான ஐ.நாவின் சாசன விதிமுறைகளை மீறிச் சிங்களப் பேரினவாதம் தனித்துவமான இறைமை கொண்ட எமது தேசத்தின் மீது, பிரித்தானியக் காலனித்துவத்திடம்  சிங்களதேசம் சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இன்றுவரை  நில ஆக்கிரமிப்பு, சிங்களத்திணிப்பு, கலாச்சாரச்சிதைப்பு,  படுகொலைகள் என்பவற்றின் ஊடாகக்  கட்டமைப்புசார் இனவழிப்பைத் தொடர்ந்துகொண்டிருக்கின்றது.

இவ்வாறு தமிழ் மக்கள் மீது அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டபோது தொடர்ச்சியாக நடாத்தப்பட்ட அறவழிப்போராட்டங்கள் ஆயுதமுனையில் சிங்கள அரசால் நசுக்கப்பட்டது.  இதிலிருந்து தமிழ் மக்களையும் மண்ணையும் பாதுகாப்பதற்காகவும் இராணுவச் சமநிலை பேணப்படும் போதுதான் இனப்பிரச்சனைக்கான தீர்வை எட்டமுடியும் என்ற சிந்தனைக்கமையவும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் தலைமையில் ஆயுதப் போராட்டம் வரலாற்றின் தேவையாகத் தோற்றம் பெற்றது.

பேரரசுகளிடமும் பிராந்திய வல்லரசான இந்தியாவிடமும் உலகச் சமூகத்திடமும் பலமுறை எமது மக்களின் உரிமைப் போராட்டத்தை அங்கீகரிக்குமாறு கோரிச் சமாதானக் கதவுகளைத் திறந்த போது, உலகமானது சிங்கள அரச இயந்திரத்தின் கரங்களை ஆயுத, பொருளாதார, தொழில்நுட்ப வளங்கல் மூலம் பலப்படுத்தாமல் இருந்திருந்தால்,  சிங்களப் பேரினவாதமானது தமிழீழ மண்ணை ஆக்கிரமித்து  முள்ளிவாய்க்காலில் மிகப் பெரும் இனவழிப்பை அரங்கேற்றியிருக்க முடியாது.

சர்வதேச அனுசரணையுடன் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்தத்தை முறித்துக்கொண்டு சிறீலங்கா அரசு நடாத்திய இனவழிப்பு யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களாலும் வெடிபொருட்களாலும்  கொல்லப்பட்டதுடன், காயமடைந்தோர் பதுங்குகுழிகளில் உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தேறின. மிகுதியானோர் தடுப்பு முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு பின்னர் சித்திரவதை முகாம்களில் கொடூர உடலியல் ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதுடன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதோடு, படுகொலையும் செய்யப்பட்டனர். இன்றும் வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரைத் தேடி உறவுகளால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் அதேவேளை தாயகத்தில் வாழ்வோர் போரின் வடுக்களுடன் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் பாதுகாப்பற்ற நிலையில் அச்சத்துடன் அடிமைகளாக வாழ்ந்துவருகின்றார்கள்.

இன்றும் சிங்கள அரசபயங்கரவாதம் தனது சர்வாதிகாரப் போக்கிலிருந்து சற்றும் மாறவில்லை என்பதை அவர்களால் தொடர்ந்தும் மேற்கொண்டுவரும் அடாவடித்தனங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. எமது மக்களின் வாழ்விடங்களுக்குள் அத்துமீறி நுழைந்து அவர்களை அடித்துத் துன்புறுத்துவதும் கைதுசெய்வதும் இன்றும் நடைபெறுகின்றது. போரில் இறந்தவர்களுக்குக்கூட நினைவேந்தல்  செய்வதற்கு அனுமதிக்கப்படாத  நிலையே காணப்படுகின்றது. அத்துடன் தற்போது  பரவியிருக்கும் கொவிட்19 நோய்த்தொற்றுக் காரணமாக உலகம் முழுவதும் முடக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழலில் சமூக இடைவெளி நடைமுறைகளுக்கமைவாக எங்கள் இல்லங்களில் இருந்துகொண்டே படுகொலை செய்யப்பட்ட மக்களுக்குச் சுடரேற்றி வணக்கம் செலுத்துவோம்.

இன்றைய சூழலில் மற்றவர்கள் செய்வார்கள் என்ற மனோநிலையிலிருந்து விடுபட்டு, தாயக விடுதலைக்கான பங்களிப்பினை எல்லோரும் வழங்கவேண்டும். தாயகத்தில் தமிழர் தேசத்திற்கு நீதியான அரசியற்தீர்வின் தேவையினை வெளியுலகிற்குத் தெளிவாக எடுத்துச் சொல்லக்கூடிய தேசியக்கொள்கையில் தெளிவானவர்களை மக்கள் பலப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் புலம்பெயர் தேசங்களில் எமது அரசியல் வேலைத்திட்டங்கள் புதிய பரிணாம வளர்ச்சியை எட்டவேண்டியுள்ளது. குறிப்பாக  இளையவர்களும் தமிழக, புலம்பெயர் தமிழ் மக்களும் அணிதிரண்டு மிகப் பெரும் வீச்சாகத் தாயகத்தில்  சிங்களப் பேரினவாதத்தால்  அரங்கேற்றி வருகின்ற தமிழின அழிப்பினை உலகரங்கில் முன்வைத்து எமக்கான நீதியும் இறைமையும் கொண்ட தமிழீழத் தேசம் விரைவில் மலரும் என்ற நம்பிக்கையுடன் தமிழின அழிப்பு நினைவு நாளில் உறுதியெடுத்துத் தொடர்ந்து போராடுவோம்.

‘‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’’

அனைத்துலகத் தொடர்பகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்.

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டுத் தொடர்ந்து போராடுவோம்! 1
பகிர்ந்துகொள்ள