தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே எமது இறுதி தீர்வு என்பதையும் வலியுறுத்தி,மனித நேய ஈருருளிப் பயணம் 13.02.2025 அன்று பிரித்தானியாவிலிருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தை ஊடறுத்து நேற்று (16.02.2025) பெல்சியம் எல்லையை வந்தடைந்தது இந்நிலையில் ஐந்தாம் நாளான இன்று (17.02.2025) பெல்சியத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுக்கல்லறையில் அகவணக்கத்துடன் ஆரம்பமானது.
தனிச்சிங்களச் சட்டம், கல்வித் தரப்படுத்தல், தமிழர்கள் மீதான திட்டமிட்ட வன்முறை, படுகொலைகள், தமிழர் பாரம்பரிய நிலங்களில் திட்ட மிட்ட சிங்கள குடியேற்றம் தமிழர்களுக்கெதிரான சட்டங்கள் என தாங்கொணா இன்னல்களினால் பிறப்பெடுத்த தமிழீழப் விடுதலைப் போராட்டம் பல்லாயிரம் மாவீரர்களினதும் தமிழ் மக்களினதும் தியாகத்தினால் உயர்நிலைக்குச் சென்று, 2009 இல் நடந்த திட்டமிட்ட இனவழிப்புப் போருக்குப் பின்னும் அறவழிப்போராட்டமாக தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 58ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு, தமிழின அழிப்பிற்கு எதிராக,உணர்வெழுச்சியுடன் அனைத்துல நீதி வேண்டி விடுதலை நோக்கி வீறுகொண்டு அறவழியில் இப்போராட்டம் பயணிக்கின்றது.
தமிழர்கள் இப்படியான தொடர்ச்சியான அறவழிப்போராட்டங்களூடாக,வெகுவிரைவாக தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில், எமது தமிழீழ மண்ணை மீட்டு சுதந்திரமாக வாழ காலத்தின் தேவை அறிந்து நாம் செயலாற்ற வேண்டும்.
சிறிலங்கா சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தி விசாரணை நடத்த வேண்டும் என்ற கருத்தை நடைமுறைப்படுத்த கோரியும் தமிழர்களுக்கு நிரந்தரத்தீர்வு தமிழீழம் என்பதை வலியுத்தியும் உரிமைக்குரல் எழுப்பி நீதிக்கான போராட்டமானது 03.03.2025 அன்று ஜெனிவாவைச் சென்றடையவுள்ளது.
எம் தமிழ் உறவுகளே!
தமிழின அழிப்பற்கு உள்ளாக்கப்பட்டு நிர்க்கதியான நிலையில் ஏதிலிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்த தமிழர்களாகிய நாம் ,தம்வாழிட நாடுகளில் தமிழின அழிப்பிற்கான நீதியினை வேண்டி,எம் வாழிட நாடுகளை தமிழர்களின் நியாயமான நீதிக்கான கோரிக்கைக்கு குரல்கொடுக்க வைப்பதன் மூலம் அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் சிங்களப் பேரினவாத அரசினை நிறுத்தி தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும் என்பதையும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதை உறுதியாக வலியுறுத்த முடியும்.
எனவே இப்போராட்டங்களுடன் நீங்களும் இணைந்து ஓரணியாய் முரசறைவோம்.
“ காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கமைய போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை “ -தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்”
“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.”










