தமிழின அழிப்புற்கு நீதி கேட்டு நெதர்லாந்தில் ஆரம்பித்துள்ள ஈருருளிப் பயணம்!

You are currently viewing தமிழின அழிப்புற்கு நீதி கேட்டு நெதர்லாந்தில் ஆரம்பித்துள்ள ஈருருளிப் பயணம்!
தமிழின அழிப்புற்கு நீதி கேட்டு நெதர்லாந்தில் ஆரம்பித்துள்ள ஈருருளிப் பயணம்! 1

சிரிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வேண்டியும் தமிழர்களுக்கு தமிழீழமே உறுதியான தீர்வு எனும் கோரிக்கைகளினை முன்னிறுத்தி மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் 3 நாளாக ஐ.நா நோக்கி 49வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரினை முன்னிட்டு தொடர்கின்றது.

கடந்த 16/02/2022 அன்று எழுச்சிகரமான முறையில் பிரித்தானியா பிரதமர் இல்லத்தின் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம், அரசியற் சந்திப்புடன் ஆரம்பித்து இன்று 18/02/2022 நெதர்லாந்தினை வந்தடைந்தது.
நெதர்லாந்தின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வரவேற்புடன் , டென்காக்ல் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன்றலில் கடும் காலநிலை மற்றும் மணிக்கு 160Km வேகத்தின் புயல்வீச்சின் அபாய எச்சரிக்கை மத்தியிலும் மக்கள் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழர்களின் வேணவாவினை ஐயம்திரிபின்றி இடித்துரைத்தனர்.

சம நேரத்தில் நெதர்லாந்து வெளி நாட்டு வெளிவிவகார அமைச்சுடனான இணையவழிச் சந்திப்பு இடம்பெற்று தமிழினப் படுகொலைக்கு நீதிவேண்டிய ஆதாரங்களும் ஒப்படைத்து அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்திலும் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் என்பதனை வலியுறுத்தி மனு மற்றும் சாட்சி ஆதாரங்களும் கையளித்திருந்தனர்.
இப்போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழர்கள் கைகளிலே தமிழினப் படுகொலை ஆதாரங்களை சாட்சியப்படுத்தியும் தமிழர்களின் அறப்போராட்டத்தில் பல்லின வாழ் மகனும் கலந்துகொண்டு மேலும் ஆதரவு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்விடர் வரினும் எம் மாவீரர்களின் இலட்சிய நோக்கில் விட்டுக்கொடுப்பின்றி எமது இலக்கு நோக்கி நகருவோம் என உறுதிபூண்டு எதிர்வரும் 07/03/2022 அன்று ஐ.நா நோக்கி மனித நேய செயற்பாட்டாளர்கள் நகர்கின்றனர்.

“நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம்.அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்”

  • தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
தமிழின அழிப்புற்கு நீதி கேட்டு நெதர்லாந்தில் ஆரம்பித்துள்ள ஈருருளிப் பயணம்! 2
பகிர்ந்துகொள்ள

Leave a Reply