தமிழின அழிப்பு நினைவு நாள் – மே 18 எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு தொடர்ந்து போராடுவோம்!!

You are currently viewing தமிழின அழிப்பு நினைவு நாள் – மே 18 எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு தொடர்ந்து போராடுவோம்!!

17.05.2021

எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு தொடர்ந்து போராடுவோம்

முள்ளிவாய்க்காலில் அதியுச்சத் தமிழின அழிப்பிற்குத் தலைமையேற்று நடாத்திய சிங்களப் பௌத்த பேரினவாத அரசாங்கம், மீண்டுமொருமுறை ஆட்சிப்பீடமேறி தமிழர் தாயகத்தில் கட்டமைப்புசார் இன அழிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எதிரி யார், என்ன செய்கிறான், எவ்வாறு காய்களை நகர்த்துகிறான் போன்ற விழிப்புணர்வு, எமது மக்களிடத்தே காணப்பட்டுத் தன்னெழுச்சியாக மக்கள் போராடுகின்றபோது, அவை சிறிலங்கா அரசால் ஒடுக்கப்பட்டு அச்சுறுத்தப்படுகின்ற நிலையில், அனைத்துலக சமூகம் இன்றுவரை பாராமுகமாக இருந்து எமது மக்களுக்கான நீதியினை மறுத்துவருகின்றது.

தமிழ்மக்களின் பாரம்பரிய நிலங்களைச் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து தொல்பொருள் ஆய்வு, மகாவலித்திட்டம் மற்றும் வனசீவராசிகள் காப்பகம் என்ற போர்வையில் காணிகளை அபகரித்துச் சிங்களக்குடியேற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்திச் சிங்கள ஆக்கிரமிப்பை விரிவுபடுத்திவருகின்றது. மேலும், எமது மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்க சாதி, மதம் மற்றும் பிரதேசவாத முரண்பாட்டுக் கருத்துகளை உருவாக்கிவருவதோடு, எமது இளைய தலைமுறையினரைச் சிதைக்கும் நோக்குடன்  போதைப்பொருள் பாவனை, பண்பாட்டுச் சீரழிவு மற்றும் வன்முறைகளை ஊக்குவிப்பதன் மூலம் எமது இளைய தலைமுறையினரின் கல்விவளர்ச்சியினைத் தடுத்துவருவதுடன் கைதுகள், கடத்தல்கள், அச்சுறுத்தல்கள்  ஊடாக எமது மக்களின் உரிமைகளை நசுக்குதல், எமது வரலாற்றுச் சான்றுகளை அழித்து விகாரைகளை அமைத்து பௌத்தமயமாக்குதல் என மிகப்பெரும் கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பை சிறிலங்கா அரசானது தமிழர் தாயகத்தில் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றது.

இதன் அதியுச்சமாகத் தமிழின அழிப்பில் கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவேந்தலினைத் தடுப்பதுடன், யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த  நினைவுத்தூபியினையும் முள்ளிவாய்க்கால் மண்ணில் அமைக்கப்பட்டிருந்த நினைவேந்தல் பீடத்தினையும் இடித்து, மீண்டும் எமது மக்களைப் பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது. இம்மிலேச்சத்தனமான செயலை, நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன் இதனை உலகின் கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளோம்.

இந்த நிலையிலும், தமிழர்களுக்கான நீதி என்ற போர்வையில், அனைத்துலகச் சமூகத்தினைச் சார்ந்தவர்களால் கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக முன்னெடுக்கப்படும் நகர்வுகளானது, பூகோள அரசியல் போட்டியில் மேலாண்மை செலுத்துவதற்காகத் தமிழர்கள் சார் விடயங்கள் கையாளப்டுகிறதே தவிர, தமிழர்களுக்கு உரித்தான நீதியை வழங்குவதற்கு இந்தத் தரப்புகளால் இதயசுத்தியுடன் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. தமிழின அழிப்பின் காரணமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தொடர்ந்து பேசு பொருளாக இருந்துவரும் இலங்கைத் தீவின் விவகாரத்தில், தமிழின அழிப்பினைத் தவிர்த்தே விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆதலால், இது தொடர்பான மாற்று மூலோபாயமும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறையையும் உருவாக்க வேண்டிய தேவையெழுந்துள்ளது.

காலத்திற்குக் காலம் தமது தேசிய நலனுக்காகத் தமிழர் அரசியலைப் பயன்படுத்தும் பிராந்தியசக்தி, கடந்த சில வருடங்களாகப் புதிய பரிமாணத்தோடும் புதிய தந்திரோபாயங்களோடும் காய்களை நகர்த்துகிறது. முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பிற்;கு முன்னர் இலங்கைத்தீவை மையப்படுத்தி சில தமிழ் அரசியற்கட்சிகளையும் தனிநபர்களையும் முன்னிறுத்தி மேற்கொண்ட நகர்வுகள் தோல்வியடைந்த நிலையில், மே 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர் புதிய வியூகங்கள் வகுக்கப்பட்டு நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள பேராபத்து என்னவெனில், தமிழர் நலனை முன்னிறுத்துவதென்ற பெயரில் நீண்ட காலத்தில் தமிழ்த் தேசியத்தை அழிக்கும் இரகசிய நிகழ்ச்சிநிரலே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் அங்கமாகவே தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் தமிழர் நலனை முன்னிலைப்படுத்தும் கட்டமைப்புகளைச் சிதைத்தழிக்கும் செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழின அழிப்பிற்கு நீதிகோரி பல்லாண்டுகளாகத் தமிழ்மக்களாகிய நாம் போராடிக்கொண்டிருக்கின்றோம். எமது போராட்டங்கள் மே 2009ஆம் ஆண்டிற்கு முன்னரும் பின்னரும் எமது மக்களின் பேராதரவுடனேயே நடைபெற்றுவருகின்றன. ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், அறவழிப் போராட்டங்களின் பயனை உள்@ராட்சி மன்றங்கள், நகரசபைகள், மாநிலங்கள் அவை  என்பனவற்றிற்குள்  கொண்டுசென்று தமிழின அழிப்பிற்கான நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னகர்ந்து வருகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாகக் கனடா ஒன்ராறியோ மாநிலச் சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ள தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரத்தினைக் குறிப்பிடலாம். அத்தோடு, தமிழ் மக்களுக்கு எதிராக இனவழிப்பினைச் சிங்கள அரசு மேற்கொள்கின்றதெனப் பிரான்சு நாட்டின் பல உள்ளுராட்சி மன்றங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுவருவதும் எமது மக்கள் மத்தியில் நம்பிக்கையினையும் உற்சாகத்தினையும் கொடுக்கின்றது. இதேவேளையில், இத்தகைய செயற்பாடுகளைச் சீர்குலைக்கும் வேலைகளில் எதிரியும் கைக்கூலிகளும் ஈடுபட்டிருப்பதால் எமது மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டுமென்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

தற்போதுள்ள கொவிட் 19 இன் நோய்த்தொற்றுக் காரணமாக உலகெங்கும் முடக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழலில், சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய தங்கள் வாழ்விட நாடுகளில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களுக்குச் செல்லமுடியாதவர்கள், தங்கள் இல்லங்களில் இருந்துகொண்டே படுகொலை செய்யப்பட்ட எமது மக்களுக்குச் சுடரேற்றி வணக்கம் செலுத்துவதோடு சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பின் பேரிழப்பைச் சந்தித்துக்கொண்டிருக்கும் நாம், இந்நோய்த்தொற்றிலிருந்து எம்மையும் எமது இனத்தையும்; பாதுகாக்கவேண்டியவர்களாக உள்ளோம்.

இத்தகைய சவால்களுக்கு முகம் கொடுத்தபடியே, நாம் எமது போராட்டத்தைத் தொடரவேண்டியுள்ளது. நாம் எந்த நாட்டிற்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால், தமிழர் தேசத்தின் உரிமையையோ நீதியையோ எந்த நாட்டினதும் நலனுக்காக விட்டுக்கொடுக்கத் தயாராகவில்லை. தமிழினத்தினைத் தோல்வி மனப்பான்மையிலும் தன்னம்பிக்கையற்றவர்களாகவும் சித்தரித்துவந்த எதிரிக்கும் கைக்கூலிகளுக்கும் முகத்தில் அறைந்தால் போலவும் தமிழினத்தின் பலத்தினை வெளிக்காட்டுமுகமாகவும் நடைபெற்றுவரும் தாயக, தமிழக, புலம்பெயர் தேசச் செயற்பாடுகள், மீண்டும் தமிழ் மக்களின் விடுதலை எழுச்சியுணர்வினைப் பலப்படுத்தியுள்ளன. காலம் இட்ட கட்டளைப்படி, வரலாறு காட்டும் வழியில் மாவீரர்களையும் அவர்களின் தியாகங்களையும், மக்களின் அர்ப்பணிப்புகளையும் மனதிலிருத்தி, எமது போராட்டத்தைத் தொடர்வோம் என தமிழின அழிப்பு நினைவுநாளில் உறுதியெடுத்துக்கொள்வோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply