திருகோணமலை – சம்பூர் சிறீலங்கா காவற்துறை பிரிவில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி காய்ச்சிக் கொண்டிருந்த பொதுமக்களை தடையுத்தரவை காண்பித்து சிறீலங்கா காவற்துறையினர் நேற்று மிரட்டியுள்ளனர்.
சேனையூர் பகுதியில் நேற்று மதியம் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி காய்ச்சிக் கொண்டு இருந்தபோது அங்கு வந்த சிறீலங்கா காவற்துறையினர் நீதிமன்ற தடை உத்தரவைக்காட்டி அச்சுறுத்தி தடுக்க முற்பட்டனர்.
இதன்போது அங்கிருந்த மக்கள் வேறு யாரையும் நினைவு கூறவில்லை உயிரிழந்த பொது மக்களுக்காகவே இதனை செய்கின்றோம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு நீதிமன்ற தடை உத்தரவை வாங்க மறுத்ததாகவும் தெரியவருகின்றது.
சிறீலங்கா காவற்துறையினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பொதுமக்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியை காய்ச்சி பொதுமக்களுக்கு பரிமாறி முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பொது மக்களை நினைவை நினைவு கூர்ந்திருந்தனர்.
இந்த நிலையில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து கஞ்சி வழங்கிய பெண் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வலுக்கட்டாயமாக சிறீலங்கா காவற்துறையினரினால் இழுந்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தது.